காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் முன்வந்துள்ளது! 16.06.2021



காரைநகர் மாணவர் நூலகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் தேவையான வசதிகள் குறைவாக இருப்பதன் காரணமாக நூலகத்திற்கு மாணவர்களின் வருகையும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.(கொரோனா இரண்டாவது காரணம் மட்டுமே).


இந்த நிலையில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக இரண்டு இலட்சம் ரூபா செலவில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையான வகுப்புகளிற்கு தேவையான தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்திற்கு அமைவான பயிற்சி புத்தகங்களை வேண்டிக்கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் முன்வந்துள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்படி நூலகத்திற்கு தேவையான பாடசாலை மாணவர்களிற்கான நூல்களின் தேவை அறிந்து கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிற்கு அறியத்தரப்பட்டும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக பலவித காரணங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் காரைநகரில் இருந்து காரைநகர் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மூலமாக இந்த வேண்டுகோள் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்திடம் கோரப்பட்டுள்ளது.


ஒரு அமைப்பாக மாணவர் நூலகத்திற்கு தேவையான பாடப்யிற்சி புத்தகங்களை வேண்டி வழங்குவதற்கு வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்களால் பலவித காரணங்கள் கூறப்பட்டுள்ள நிலையிலும் அசட்டையீனமான காரணங்களினாலும் காலத்தின் தேவையறிந்து ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் உடனடியாக இத்தேவையினை பூர்த்தி செய்யவுள்ளது.


தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான பாடசாலை மாணவர்களிற்கு தேவையான தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வணிகமும் கணக்கீட்டு கல்வியும், கட்டுரைகள் போன்ற 78 வகையான தேவையான புத்தகங்களிற்கான விபரம் கிடைக்கப்பெற்றுள்ளன.


முதல்கட்டமாக ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக பணஉதவி புரிய விரும்புபவர்ளின் தொகைக்கு ஏற்ப மேற்படி புத்தகங்கள் ஒவ்வொன்றும் எத்தனை வேண்டி கொடுக்கப்படும் என தீர்மானிக்கப்படும்.
கொரோனா காலத்தில் காரைநகர் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களில் ஓரளவு வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே ZOOM ஊடாக கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்ரநெற் இணையத்தள வசதி இல்லாத, தொடர்பாடல் உபகரணங்கள் அற்ற நிலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீணே பொழுதை கழித்து வருவதாகவும், சில நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் தேவையான பயிற்சி நூல்களைப் பெற்றும் ZOOM ஊடாகவும் கல்வி கற்ற வருகின்றார்கள்.


கடந்த ஒரு வாரமாக காரைநகரில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக தொடர்பு மேற்கொண்டு இது தொடர்பான விபரங்களை பெற்றுக்கொண்ட வகையில் பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே அரச உத்தியோகத்தில் உள்ளவராக இருந்தாலும் இரண்டு பிள்ளைகளிற்கு மேல் உள்ள குடும்பத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட smart phone களை பெற்றுக்கொடுக்கவோ அல்லது தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான பயிற்சி புத்தகங்களையோ வேண்டிக்கொடுக்க முடியாத சூழ்நிலையிலேதான் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் smart phone இற்கு தேவையான DATA வினை கிழமை தோறும் பெறுவதற்கும் வசதிகள் அற்ற நிலையில் பலநூறு பெற்றோர்கள் இருந்து வருகின்றார்கள் என்பதும் உண்மையும் வெளிப்படையான காரணமும் ஆகும்.


ஆனாலும் வெளிநாடுகளில் காரைநகர் மக்களின் பெயரால் மன்றங்களை ஆட்சி செய்யும் நிர்வாகங்கள் கொரோனா என்னும் காரணத்தை முன்வைத்து கடந்த 18 மாதங்களாக நிதி இருந்தும் நிதி வழங்க கொடை வள்ளல்கள் இருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முன்வரவில்லை என்பது கவலைக்குரியது.


காரைநகர் மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களின் வருகையினை கூட்டுவதற்காகவும் வசதி குறைந்த மாணவர்களின் கற்றல் தேவைக்கான போட்டோ கொப்பி எடுப்பதற்கான வசதியினை செய்து வழங்கவும் அனைத்து மாணவர்களின் தேவைகளிற்குமாக Heavy Duty போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் ரூபா 5 இலட்சம் செலவில் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக அடுத்த கட்டமாக வேண்டி வழங்கப்படவுள்ளது.


கனடா வாழ் காரைநகர் மக்களே, காரைநகர் மக்களின் தேவைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு செயலாற்றும் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு உங்களது அளவிலா ஆதரவினை எதிர்பார்த்துள்ளது ‘எனது ஊர் காரைநகர்’.


‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக குறிப்பிடப்படும் உதவிகளிற்கு வழங்கப்படும் நிதி உதவிகளிற்கான ரசீதும் அதன் மூலம் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளிற்குமான வரவும் செலவும் வழமைபோல எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்படும். இன்றே செய்வோம். அதை நன்றே செய்வோம்.


காரைநகரில் தற்போது வசதி படைத்த சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். ஆனாலும் தமது அன்றாட தேவைகளிற்கே தற்போது சிரமத்தின் மத்தியில் அரச உதவிகளையும் அடுத்தவர் உதவிகளையும் எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து தொடர்புகளை மேற்கொள்ளும் பலரும் தமது வசதிக்கும் வாய்ப்புகளிற்கும் சார்பாக ஏதேதோ ஒரு சிலரை தொடர்பு கொண்டு காரைநகரில் எல்லோரும் பணத்தில் மிதக்கின்றார்கள் என்றும், போட்டோ கொப்பி எடுக்க நாம் ஏன் இலவசமாக வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் நியாயமும் காரணமும் கற்பிக்கின்றார்கள்.


நம்பாதீர்கள். பாடசாலைக்கு செல்லும் ஒரு பிள்ளைக்கே அனைத்து பாடத்திற்குமான பயிற்சி புத்தகங்களை வேண்டி கொடுக்க முடியாத சூழ்நிலையில் தான் கூடிய சதவிகிதமான பெற்றோர்கள் உள்ளார்கள். போட்டோ கொப்பி ஒன்றிற்கு 4 ரூபா முதல் 5 ரூபா வரை அறவிடப்படுகின்றது.


நம்புங்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் என்றும் எப்போதும் களநிலவரம் அறிந்தும் நேரடியாக கல்வியாளர்கள், சேவையாளர்கள், பொதுப்பணியாளர்கள், மாணவர்கள், நண்பர்கள், நல்லெண்ணம் கொண்டவர்கள் என பலருடனும் கொண்ட நேரடி தொடர்புகள் மூலம் காரைநகர் மக்களின் தேவையறிந்து செயற்பட்டுவரும் இணையத்தளம் ஆகும்.


நீங்கள் வழங்கும் நிதி உதவிகள் என்றும் எப்போதும் எதிலும் வீணாகாது என்பதுடன் நீங்கள் வழங்கும் நிதி உதவிகள் உடனடியாக காரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்பதுடன், இந்த இணையத்தளத்தின் தொகுப்பாளரான தீசன் திரவியநாதன் ஆகிய எனது தனிப்பட்ட நிதி பங்களிப்புடனும் மேற்படி காரைநகர் மாணவர்களின் கற்றல் தேவைகளிற்கான உதவிகள் நிறைவேற்றப்படும்.


காரணங்கள் தேடாதீர்கள். நம்புங்கள். கொரோனாவை காரணம் காட்டி எதையும் தள்ளி போடாதீர்கள். உங்கள் ஆதரவும் நீங்கள் தரும் நம்பிக்கையும் என்றும் எப்போதும் ‘எனது ஊர் காரைநகர்’ காரை மக்களின் தேவையறிந்து செயற்படும். 2020ம் ஆண்டு கொரோனா சூழ்நிலையிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும், தரம் 10க்கான க.பொ.த.சாதாரண பரீட்சையும், தரம் 12க்கான க.பொ.த.உயர்தர பரீட்சையும் நடைபெற்றன. அதே போன்று 2021 இலும் தாமதமானாலும் அனைத்து பொதுப்பரீட்சைகளும் நடைபெறும்.


வசதி படைத்த மாணவர்கள் சில நூறு இருந்தாலும் வசதிகள் குறைந்த பல நூறு மாணவர்களிற்காக மேற்படி கோரப்பட்ட திட்டம் சில வாரங்களிற்குள் காரைநகர் மாணவர்களிற்கு நிறைவேற்றி கொடுக்கப்படும். உடனடியாக உங்களால் முடிந்த நிதியுதவியினை theesan@karainews.com என்ற இமெயில் முகவரி ஊடாகவோ அல்லது 416 821 8390 என்ற தொலைபேசி இலகத்தின் ஊடாகவோ வழங்க முடியும்.


காரைநகர் கொரோனா முடக்கத்தின் பின்னர் ஒரு சில வாரங்களில் மீள படிப்படியாக இயங்கு நிலைக்கு வருகின்ற போது காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தில் மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் தயாராக இருக்கும். அவற்றின் எண்ணிக்கை நீங்கள் வழங்கும் நிதியுதவியில் தங்கியுள்ளது. நன்றி!-

‘எனது ஊர் காரைநகர்’

16.06.2021