காரைநகர் மாணவர்களிற்கு கல்வி கற்றலுக்கான உதவி!அனைவருக்கும் கல்வி July 07, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நீண்ட கால அடிப்படையில் பாதிப்படையவுள்ளவர்கள் பட்டியலில் பாடசாலை மாணவர்கள் முதலிடத்தை பெறுகின்றார்கள். அரச பாடசாலைகள் கிரமமாக நடைபெறமுடியாத நிலையில் இந்த ஆண்டுக்கான அடுத்து வரும் பொதுப்பரீட்சைகளிற்கான திகதிகளை அரச கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.


நவம்பர் மாத இறுதியில் உயர்தர பரீட்சையும், டிசம்பர் மாதம் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாதாரண தரப்பரீட்சையும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான கற்றலுக்கான பாடசாலை நேரங்கள் ஏற்கெனவே மிகவும் குறுகிய நிலையில் மாணவர்கள் படித்தார்களோ அன்றி படிக்கவில்லையோ என்ற எந்த கவலையும் அற்ற நிலையில் பொதுப்பரீட்சைக்கான திகதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்த அரசு அப்படித்தான். ஆனால் நாமும் அதையே ஏற்றுக்கொள்ள போகின்றோமா..? பாடசாலைகள் மூடப்படலாம். வெளியிடங்களிற்கு சென்று கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை கல்வியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். ஆனால் காரைநகரிற்குள்ளே பாடசாலை பாடத்திட்டத்திற்கமைவான கல்வியை காரைநகர் மாணவர்கள் பெற்றுக்கொள்ள தேவையான வசதிகளை இடம் பெயர்ந்த காரைநகர் மக்களால் காரைநகர் மாணவர்களிற்கு வழங்க முடியும்.


காரைநகரில் இன்று வதியும் 50 வீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரச உத்தியோகம் அற்றவர்கள், அதிலும் 25 வீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த குடும்பங்கள் தினக்கூலிகளாகவோ அன்றி அன்றாட வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை நடாத்துவதற்கான வருமானத்தை பெற்றுக்கொண்டு வாழ்க்கை நடாத்துபவர்கள். இந்த நிலையில் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் சிரமங்களை மட்டுமே கருத்தில் கொண்டு பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் அடுத்து என்ன நடக்கும் என ஆரவாரங்களிற்கு மத்தியில் மாணவர்கள் தமது கல்வியை அவர்களையும் அறியாமலே தொலைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.


தனியார் கல்வி நிலையங்களோ அன்றி ஊர் மன்றங்களோ நீண்ட கால சிந்தனையற்ற வகையில் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் அன்றாடம் வெளியாகும் செய்திகளிற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள். காரைநகர் கல்வியாளர்களே கடந்த கால ஓய்வு பெற்ற ஆசிரியர்களே, முன்னாள் கல்விப்பணி உத்தியோகத்தர்களே காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக காரைநகரில் தனியார் கல்வி நிலையங்களில் அனைவருக்கும் கல்வி என்பதனை ஊர்ஐpதப்படுத்திக்கொள்ளுங்கள். எவ்வாறு..? எப்படி...?


பொதுப்பரீட்சைகள் எப்படியோ காலம் கடந்தாலும் நடக்கத்தான் போகின்றன. இதற்காக மாணவர்கள் தயாரா..? பாடசாலைகளை நடாத்த முடியாமைக்கு அரசிற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் காரைநகரில் காரைநகர் ஆசிரியர்கள் ஊடாக தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களிற்கான கல்வியை வளங்க முடியும். யாழ் மாவட்டம் ஏற்கெனவே கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் தீவகவலய கல்வி மேலும் பின்னடைந்துள்ள நிலையில் இந்த பொருளாதார நெருக்கடியில் காரைநகரில் பெருவாரியாக பாடசாலைகளில் கல்வி பயிலும் நடுத்தர வர்க்க மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் கல்வி நிலமை மேலும் மோசமான நிலையினை அடுத்த ஆண்டு பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் போது ஆளாளுக்கு காரணம் தேடிக்கொள்ளாதீர்கள்.


‘எனது ஊர் காரைநகர்” ஏற்கெனவே கடந்த ஆண்டுகளிலும் சரி இன்றும் சரி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை கொண்ட மாணவர்களிற்கான தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்ற முடியாத மாணவர்களிற்கான மாதாந்த தொகையினை செலுத்த முன்வந்துள்ளதுடன் சில மாணவர்களிற்கான மாதாந்த கட்டணங்களை செலுத்தியும் வந்துள்ளது. தற்போதைய நிலையில் கூலித்தொழிலாளர்களை உடைய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களிற்கான கட்டணங்களை செலுத்த வெளிநாடுகளில் உள்ள ஊர் மன்றங்கள காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக முன்வரவேண்டும். காநைரகர் அபிவிருத்தி சபையினரும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும்.


இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது இன்னும் சில மாதங்களிலோ அன்றி இன்னும் சில ஆண்டுகளிலே சீர்பெறலாம் ஆனால் இந்த வருடம் கல்வி கற்று பொதுப்பரீட்சை எழுத வேண்டிய மாணவர்கள் கல்வியில் காலா காலத்திற்கும் பின்தள்ளப்பட்டவர்களாகவே வாழ நேரிடும். தனியார் கல்வி நிலையங்கள் ஏன் இலவசமாக மாணவர்களிற்கு கல்வியை போதிக்க முடியாது என்ற கேள்வி உங்களிற்கு இங்கே எழவேண்டும். அதற்கான காரணம் தனியார் கல்வி நிலையங்களில் வெளியிடங்களை சேர்ந்த ஆசிரியர்களே பலரும் கல்வி பயிற்றுவித்து வருகின்றார்கள். இலவசமாக கல்வி கற்பிக்க அவர்கள் முன்வரமாட்டார்கள்.


தனியார் கல்வி நிலைய இயங்குனர் ஒருவருடன் தொடர்பு கொண்டு வினவிய போது கல்வியை பற்றியும் காரைநகர் அபிவிருத்திப ற்றியும் காரைநகர் அபிவிருத்தி சபை உட்பட வெளிநாடுகளில் இயங்கும் காரை பொது அமைப்புக்கள் கவலை கொள்ளாத போது அசர உத்தியோகத்தில் பாடசாலைக்கு போனாலும் போகாவிட்டாலும் மாதாந்த சம்பளம் பெற்று வரும் அரச உத்தியோகத்தர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். காரைநகரில் காரைநகர் அபிவிருத்தி சபை, கலாநிதி ஆ.தியாகராசா அறக்கட்டளை, காரைநகர் சடையாளி ஞானவைரவர் அறக்கட்டளை என்பன மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்க முன்வந்துள்ள போதிலும் கூலித்தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் வறுமையில் வாடும் குடும்பங்கள் யாரிடம் எங்கே எப்படி உதவிகளை கோருவது என்று தெரியாத நிலையில் எல்லாம் ஊரோடு ஒத்து வாழ் என்கின்ற நிலையில் மாணவர்கள் இழந்து வரும் கல்வி பற்றி தெரியாத நிலையில் உள்ளார்கள்.


வெளிநாடுகளில் இருந்து அனைத்தும் அறிந்த அறிவு ஜீவிகளும் எப்போது அடுத்த பரிசளிப்பு நிகழ்வை நடாத்தி நாலு பேருக்கு பொன்னாடை போர்க்கலாம் என்ற கவலையில் மட்டுமே மூழ்கி இருப்பதாகவும் இன்று இப்போதைய நிலையில் காரைநகர் மாணவர்களின் கல்வியில் எந்த அக்கறையும் இன்றி கண்டும் காணத நிலையிலேயே இருந்து வருகிகின்றார்கள்.


‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகரில் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் கூலித்தொழிலை அன்றாட தொழிலாக கொண்டு இயங்கும் குடும்பங்களை உடைய மாணவர்களிற்கு தனியார் கல்வி நிலையத்தில் இலவச கல்வியை வழங்க முன்வருகின்றது. இந்த செய்தியை கூட அந்த கூலித்தொழிலாளர் குடும்பங்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை. தயவு செய்து காரைநகர் முன்னாள் ஆசிரியர்களே தற்போதைய ஆசிரியர்களே உங்கள் பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களிற்கு சென்று கல்வி கற்ற முடியாது உள்ள மாணவர்களை இனம் கண்டு தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்ல உதவுங்கள். அல்லது காரைநகர் அபிவிருத்தி சபையினை தொடர்பு கொள்ள சொல்லவும். ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக அவர்களிற்கான மாதாந்த கல்விக்கான பணம் வழங்கப்படும்.


கனடாவிலும் சரி மற்றும் வெளிநாடுகளிலும் சரி இயங்கும் காரை அமைப்புக்கள் பெயருக்காகவும் பெருமைக்காகவும் மட்டுமே ஊர்ப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். காரைநகரின் இன்றைய நிலமையினை கண்டு கொள்ளவோ அன்றி சந்தர்ப்பத்திற்கேற்ப உதவிகளை இனம் கண்டு தெரிவிக்கவோ முடியாத திராணியில் தான் ஊர் மன்றங்களை நடாத்தி வருகின்றார்கள். ஆனால் கனடாவிலும் சரி உலக நாடுகளிலும் சரி கல்விக்கான உதவிகளை வழங்க காரைநகர் மக்கள் ஆயிரம் ஆயிரமாக தயாராக உள்ளார்கள்.


‘எனது ஊர் காரைநகர்” என்றும் எப்போதும் காரைநகர் மண்ணுடன் தொடர்புகளை தினம் தினம் கொண்டுள்ளதும் உண்மையில் காரை மண்ணின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுபவர்களுடனும் தொடர்புகளை கொண்டுள்ளது. எம்மை தொடர்பு கொள்வதன் மூலம் இன்றைய நிலையில் கல்விக்கான உதவிகளை யார் மூலம் தேவையானவர்களை சென்றடைய வேண்டும் என்பதுடன் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அனைத்து விடயங்களையும் உங்களிற்கு வழங்க எந்த நேரமும் தயாராக உள்ளது.


Costco வில் அன்றாடம் மணித்தியால சம்பளத்திற்கு பணி புரியும் என்னால் தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பத்திற்கும் மேற்பட்ட காரை மாணவர்களிற்கு உதவி செய்ய முடிகின்ற போது பல நூற்றுக்கணக்கான வெளிநாடுகள் வாழ் காரை மக்கள் உடனடியாக கல்விக்கான உதவிகளை வழங்க காத்திருக்கின்றார்கள். காநைரகரில் காரை மாணவர்களின் கல்வியில் மிகப்பெரும் நாட்டமும் மண்ணின் விசுவாசிகளாகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களும் பல நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றவர்களும் காரைநகரில் இன்று வசித்து வருபவர்களுமான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, திரு.வே.முருகமூர்த்தி, திரு.இ.திருப்புகழூர்சிங்கம், திரு.உருத்திரசிங்கம், கலாநிதி செல்வி விமலாதேவி விஸ்வநாதன், முன்னாள் அதிபர் குமாரவேலு மாஸ்ரர், இவர்களுடன் வீரமங்கை யோகரத்தினம், திரு.நிமலன் கணபதிப்பிள்ளை, திரு.க.நேத்திரானந்தன், ராணி ரீச்சர், காரை இந்து அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் காரை மண்ணின் மாணவர்களின் கல்வியில் நாட்டமுடன் செயற்பட்டு வருபவர்கள். இன்றைய காலத்தின் நிலமை அறிந்து காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக அனைவருக்கும் பாடசாலை தவிர்ந்த நிலையில் கல்வியினை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.


அடுத்து வரும் சில மாதங்களிற்கு இலங்கையின் பொருளாதார நிலமை கட்டுக்குள் வரும் வரை வழங்குவதற்கு எத்தனை இலட்சமானாலும் வழங்குவதற்கு வெளிநாடுகள் வாழ் மக்கள் வழங்க தயாராக உள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றோம். நவம்பர் மாதம் உயர்தர பரீட்சை எழுத வேண்டிய மாணவர்கள் ரியூசனுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாலோ அன்றி டிசம்பர் மாதம் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான கற்றலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலோ அன்றி ஏப்ரல் மாதம் சாதாரண தர பரீட்சைக்கான கற்றலை பெறமுடியாதுள்ள மாணவர்களை இனம் கண்டு தெரிவிப்பதுடன் அதற்கான வசதிகளை செய்து வழங்க காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கு தேவையான நிதியுதவிகளை வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் ‘எனது ஊர் காநைரகர்” கனடாவில் பிச்சை எடுத்தாலும் வழங்கும் என ஊர்ஜிதப்படுத்திற்கொள்கின்றது ‘எனது ஊர் காரைநகர்”

"கல்வி ஒருவனுக்கில்லையேல் இந்த யகத்தினை அழித்திடுவோம்"