கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு 12 ஆரம்ப பாடசாலைகளிற்கும் தலா 10 இலட்சம் வீதம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.
காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் ஒவ்வொரு பாடாசாலைகளின் இணைந்த வகையில் 12 தனிப்பட்ட நிரந்தர வைப்பாக மொத்தம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு பாடசாலைகளும் ஆறுமாதங்களிற்கு ஒரு தடவை நேரடியாக பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க கணக்கிற்கு அதன் வட்டிப்பணமாக 50 ஆயிரம் ரூபாய்களிற்கு மேற்பட்ட நிதியினை பெற்றுவருகின்றார்கள். வருடம் ஒன்றிற்கு 12 ஆரம்ப பாடாசாலைகளும் ஒரு இலட்சம் வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்ட நிதியினை வட்டியாக பெற்றுள்ளார்கள்.
2014ம் ஆண்டு திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் அமைந்த நிர்வாக சபையில் செயலாளராக திரு.தீசன் திரவியநாதன் அவர்களும், பொருளாளராக திரு.பேரின்பராஜா திருநாவுக்கரசு தலைமையிலான நிர்வாக சபையினரால் இத்திட்டமானது வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினை செயற்படுத்த நிர்வாக சபை எடுத்த தீர்மானங்களிற்கு கனடாவில் உள்ள காரைநகர் மக்களிடையே மிகப்பெரும் ஆதரவு கிடைக்கப்பெற்ற போதிலும் சிறியளவிலான முந்தைய நிர்வாக சபையினை சேர்ந்த 13 பேர்கள் கொண்ட ஒரு குழுவினரால் பலத்த எதிர்ப்பும் அதனை செயற்படுத்த பலவித தடைகள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் மட்டுமல்லாது கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினையும் செயற்படுத்த முடியாதளவிற்கு வதந்திகளை பரப்பியதுடன் கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி கணக்கினை வங்கிக்கு தவறான தகவல்களை வழங்கி ஒன்றரை வருடங்கள் முடக்கியும் இருந்தனர்.
2016ம் ஆண்டு மே மாதம் மீண்டும் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை அமையப்பெற்று மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த செயற்பாடுகளை செயற்படுத்தி அதன் மூலம் பெறப்பட்ட 25,000 டொலர்கள் வரையான நிதி கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கிக்கணக்கில் இருந்ததும் தொடர்ந்து 2017-2018 இல் அமைந்த திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையிலான நிர்வாக சபையினரால் மேற்கொண்டு 20,000 டொலர்கள் வரையான நிதி மன்றத்தின் செயற்பாடுகள் மூலம் பெறப்பட்டு 2018 இன் இறுதிப்பகுதியில் மொத்தம் 50 இலட்சம் ரூபாய்கள் இலங்கையில் கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் உள்ள ஹட்டன் நாஷனல் வங்கிக் கணக்கில் காரைநகர் பாடசாலைகளின் மேலதிக கற்றல் தேவைகளிற்கென நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளின் நிரந்தர வைப்பிற்கான நிதி சேகரிப்பின் போது திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினர் கனடாவில் வாழும் காரைநகர் மக்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரைநகர் மக்கள் தமது பங்களிப்பினை செலுத்த முன்வந்தனர். ஆனாலும் இத்திட்டமானது நடைமுறைக்கு சாத்தியம் அற்றது எனவும் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் சேர்த்துக்கொள்வது சாத்தியமற்றது எனவும் அவ்வாறு பணத்தை பாடாசாலைகளிடம் கொடுத்தால் அப்பணம் மோசடி செய்யப்பட்டு காணாமல் போய்விடும் என்றும் நம்பத்தக்க வகையில் பல வதந்திகளை பரப்பியதுடன் நிதி வழங்க முன்வந்தவர்களிற்கு தனிப்பட்டவகையில் தொடர்பு கொண்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.
ஆனாலும் சற்றும் மனந்தளராத திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினர், செயலாளராக கடமையாற்றிய திரு.தீசன் திரவியநாதன் 20,000 டொலர்கள்(23 இலட்சம் ரூபாய்கள்), மற்றும் தலைவராக டமையாற்றிய திரு.தம்பிஐயா பரமானந்தராசா 10 இலட்சம் ரூபாய்கள், மன்றத்தின் பெயரில் கனடாவில் இருந்த 15,000 டொலர்கள்(17 இலட்சம் ரூபாய்கள்) மற்றும் இலங்கையில் மன்றத்தின் பெயரில் இருந்த 10 இலட்சம் ரூபாய்கள் உட்பட இத்திட்டத்திற்கு 85 பேர்கள் வரையானோர் மட்டும் வழங்கிய நிதியுதவியுடன் 05.05.2015 அன்று காரைநகர் அபிவிருத்தி சபை திரு.சிவா மகேசன் தலைமையிலான நிர்வாக சபையினர், காரைநகர் பாடாசாலை கல்விக்கோட்ட அதிகாரி முன்னிலையில் அதிபர்களை அழைத்து காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் கலந்து கொண்டு மேற்படி நிரந்தர வைப்புக்களிற்கான பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
05.05.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் பாடசாலைகளின் பெயர்களில் பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றமையும் அதன் விபரங்கள் 2019ம் ஆண்டு காரைநகர் அபிவிருத்தி சபையினரால் வெளிளிடப்பட்ட வரவு செலவு அறிக்கையின் ஊடாக அறிந்து கொள்ளத்தக்கது. அத்துடன் வருடந்தோறும் கிடைக்கப்பெறும் வட்டி பணத்தின் ஊடாக பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளிற்காக வழங்கப்படும் செலவீனங்கள் உட்பட தனிப்பட்ட வகையில் இதன் வட்டி பணத்தின் வரவு செலவு விபரங்கள் கனடா காரை கலாசார மன்றத்திற்கு பாடசாலை அதிபர்களினால் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம், சிறு திருத்த வேலைகளிற்காக பயன்படுத்த முடியும். மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு), உணவு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே 05 / நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.