ஈழத்து சிதம்பரத்தை தளமாக கொண்டு மீண்டும் குழப்பமும் தனிமனித பலப்பரீட்சைகளும் ஆரம்பமாகியுள்ளன..!ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் திருக்கோயிலை மையமாக கொண்டு அவ்வப்போது தனிமனித பலப்பரீட்சைகள் நடைபெற்று வந்துள்ளன. அவற்றில் இருந்து காரைநகர் மக்கள் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சாதித்தவை எவை என்பது பற்றி இன்னும் அறிந்திராத வகையில் மீண்டும் ஒரு குழப்ப நிலைமை ஆரம்பித்துள்ளது. காரைநகர் மக்களிற்கு திண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஐயனாரும், சிவனும் முழுமுதல் கடவுள்களாக விளங்கினாலும் இக்கோயிலை மையமாக வைத்து பணபலமும் அதிகார பலமும் போட்டி போடும் நிலையில் காரைநகர் மக்களும் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் முன்னாள் காரைநகர் மக்களும் அவர்கள் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் யதார்த்தமற்ற சிந்தனை செயற்பாடுகளினால் உண்மைகளை அறிந்து கொள்ள மறுத்து வருகின்றார்கள்.


யாழ் நகரின் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அனைத்தும் கோயில் நிர்வாகமே கோயில் சொத்துக்களையும், கோயிலை சுற்றிவரவுள்ள கோயில் சம்பந்தமான செயற்பாடுகளையும் செயற்படுத்தி வரும் வேளையில் திண்ணபுரம் சிவன் கோயிலில் மட்டும் கோயிலை சார்ந்து பல நிர்வாகங்களும் பல தனிப்பட்ட செயற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி நடைபெற்று வந்துள்ளன. கோயில் அடியவர்கள் இதனை முற்கண் தெளிவுற விளங்கிக் கொள்ள வேண்டும்.


அத்துடன் திண்ணபுரம் சிவன் கோயிலுக்கு செல்லும் பக்த அடியவர்கள் கடவுள் அருள் வேண்டியே கோயிலுக்கு செல்கின்றார்கள். ஆனால் அண்மைக்காலமாக திண்ணபுரம் சிவன்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில் அபிஷேக ஆராதனை பூசைகளையும் வழிபாட்டினையும் இரண்டாம் பட்சமாக்கி அன்னதானமும், கோயிலை சுற்றவர நடைபெறும் செயற்பாடுகளே முன்னுரிமையாக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் கோயில் மூடப்பட்டு சீல் வைத்தாலும் பரவாயில்லை, கோயில் ஆதீனகர்த்தாக்கள் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டாலும் பரவாயில்லை அன்னதான மடம் இயங்கவேண்டும், கோயில் முன்னறில் தனிப்பட்ட நபர்களினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் செயற்படுத்தப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பலவித சர்ச்சைகளிற்கு மத்தியில் பங்குனி உற்சவத்தினை நிறுத்தி கோயிலுக்கு சீல் வைக்கவும் சிலர் முயன்றுள்ளதன் மூலம் அறிந்து கொள்ளப்படவேண்டியது.அது மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து பல இலட்சம் ரூபாய்கள் செலவில் திருவிழாவிற்காக ஊர் செல்லும் மக்களில் பலர் கோயிலுக்கு அறுசுவை உணவருந்தவே செல்வதாக இன்னும் சில வருடங்களில் நம்ப வைக்கப்படுவார்கள்.


திண்ணபுரம் சிவன்கோயில் வளாகத்தினுள் எவ்வித செயற்பாடுகள் நடைபெற்றாலும் அவை அனைத்தும் திண்ணபுர சிவன்கோயில் ஆதீனகர்த்தாக்களின் அனுமதியுடன் தான் நடைபெறவேண்டும். ஆனால் இந்த நிலமை தற்போது கட்டுக்குள் இல்லை. கோயில் நிர்வாகத்திலும் கோயில் ஆதீனகர்த்தாக்களின் செயற்பாடுகளில் முரண்பாடுகள் இருப்பினும் மூன்றாவதாக உள்ள ஒருவர் ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு தமது செயற்பாடுகளை கோயில் வளாகத்தினுள் நடாத்துவதற்கு முன்வரவேண்டும். முதற்கண் கோயில் நிர்வாகம் சரிவர இயங்கவேண்டும், கோயில் பூசை, திருவிழாக்கள் மற்றும் கோயில் நடைமுறை பற்றி கவலையில்லாதவர்கள் ஏன் எதற்காக அங்கே இன்னொரு செயற்பாட்டிற்காக கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்கள்.


கோயிலுக்காகவே அன்னதான மடமும், கோயில் வளாகத்தை சுற்றிவரஉள்ள செயற்பாடுகளும் அமைய வேண்டும். இது நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ கோயில் மற்றும் கோயில் செயற்பாடுகளிற்கு குந்தகமாக அமையக்கூடாது. அதன்காரணமாகவே நல்லூர் திருவிழா காலங்களில் தனிப்பட்ட சொந்த காணியினுள்ளே விளம்பர பதாதைகள் வைத்திருக்க முயலும் பலருக்காக சுற்றிவர வீதி திரை போட்டு மொத்த வீதியும் மறைக்கப்படுகின்றது.


அன்னதான மடம் மற்றும் யோகர் வளாகம் என முன்னெடுக்கப்படும் மறைமுக செயற்பாடுகள் முக்கியமா அல்லது திண்ணபுர சிவன் கோயில் இறைமையும் காரை மக்களின் அடையாள சின்னமாக விளங்கும் திண்ணபுரம் சிவன்கோயில் முக்கியமா என்பதை காரை வாழ் மக்கள் புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.


இது ஒரு முன்னோட்டமாக இந்த புரிதல் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈழத்து சிதம்பரத்தின் ஆதீனகர்த்தாக்களை பிரித்து, திண்ணபுரம் சிவன் கோயில் நித்தியபூசை திருவிழாக்களை நிறுத்தியாவது தமது செயற்பாடுகளை செயற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டுள்ளவர்களது செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்து வரப்படவுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து திருவிழாவின் போது கோயிலுக்கு வந்த பக்தர்களிற்கு அன்னதான மடம் காலத்தின் கட்டாயத்தினால் முக்கியமானதொன்றாகியது, ஆனால் மடத்திற்காகவே கோயில் என்ற ரீதியில் கடந்த காங்களில் அன்னதான மடம் செயற்பட்டு வந்துள்ளது பற்றியும், திண்ணபுரம் சிவன்கோயிலின் பெயரால் சிலரிடம் பணம் பெற்று பின்னர் யோகர் வளாகம் என்னும் செயற்பாடு ஏன் எப்படி யாரால் ஆரம்பமானது என்பது பற்றியும் அதன் பின்னணிகள் பற்றியும் காரை மக்கள் எங்கிருந்தாலும் அறிந்து கொண்டு அதன் பின்னர் கோயிலா, மடமா, யோகர் வளாகமா என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.


திண்ணபுரம் சிவன் கோயில் பற்றி பலவித சர்ச்சைகள் இருந்தாலும், பலரும் பலவேறு கதைகள் விமர்சனங்களை ன்வைத்திருந்தாலும் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் சம்பவங்கள், ஆதீனகர்த்தாக்களை உள்ளே தள்ளி, கோயிலை மூடியாவது தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முனையும் பணக்கார கோமாளிகளின் செயற்பாடுகள் காரை மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும் என திருவருள்பாலித்துள்ளது. இவர்களது செயற்பாடுகள் யதார்த்தமற்றவை. இவர்களில் பலரும் கோயிலுக்காக அன்றி தனிப்பட்ட ஒருசிலருக்காகவே திருப்பணி செய்வதாகவும், அவர்களிற்காகவே நிதி அன்பளிப்பு செய்ததாகவும் தாமாகவே முன்வந்து தெரிவித்துள்ளனர்.


கோயிலுக்கு செல்லாதவர்களும், கோயில் பற்றி சிறிதளவேனும் தெரிந்திராதவர்களும், ஐயனார் சிவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் அதையும் விட தம்மிலும் தமது செயற்பாடுகளிலும் நம்பிக்கையில்லாதவர்களும் தமது மானம் மரியாதை அறிவு எதையும் பற்றி சிறிதளவேனும் கவலை கொள்ளாது சமூகவலைத்தளங்களில் பக்கம் பக்கமாக பிசத்துபர்களும் நியாயத்திற்காக குரல் கொடுக்கிறார்களாம்.


ஈழத்து சிதம்பரத்தில் எல்லாமே அந்த ஆண்டிகேணி ஐயனும் தில்லையம்பல நடராஜரும் தான். நியாயமோ அநியாயமோ திண்ணபுரம் சிவன்கோயிலில் மட்டுமல்ல ஈழத்தில் இன்று இயங்கும் பல பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் எல்லாவற்றிலும் மக்கள் ஆதினகர்த்தாக்களை நம்பியே செயற்படுகின்றார்கள். இந்த இணையத்தளமும் அதே கொள்கையுடன் தொடர்ந்து திண்ணபுரம் சிவன்கோயில் செய்திகளை எடுத்து வரும். எதிர்பாருங்கள் சர்ச்சைகளின் பின்னணியும் செயற்பாடுகளின் உண்மை நிலவரங்களையும்...