காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைகளில் ஒன்றாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!
1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சி மற்றும் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் 19.01.2021 அன்று உத்தியோகபற்றற்ற முறையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரைநகர் இந்துக் கல்லூரியினை தேசிய பாடசாலையாக அங்கீகரிக்க கோரி 2020 டிசம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் குழுவினர் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர், மற்றும் பழைய மாணவர் சங்க கிளை உறுப்பினர்களை சந்தித்து முறையே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ததுடன், பாடசாலைக்கு நேரடியாக சென்று பாடசாலையின் நிலமைகளையும் அவதானித்துச்சென்றனர்.(கீழே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
கோத்தபாய அரசின்கீழ் இலங்கையின் ஒவ்வொரு பிரதேசசெயலர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையாவது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் திட்டம் முன்வைக்கப்பட்டதையடுத்து யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் இதுவரை தேசிய பாடசாலையாக அங்கீகாரம் பெறாத பத்து பாடசாலைகளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் காரைநகர் இந்துக்கல்லூரி காரைநகர் பிரதேசத்தில் இருந்து தெரிவாகியுள்ளது.
இதன் மூலம் காரைநகர் இந்துக் கல்லூரி கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் போது தேவைகளிற்கான நிதி உதவியினை பெறமுடியும் என்பதுடன், ஆசிரியர், அதிபர் மற்றும் அலுவலர்கள் பற்றாக்குறை இனிவரும் காலங்களில் ஏற்படாது எனவும் வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து நேரடியாக தேசிய பாடசாலைகளிற்கு அரசினால் வழங்க முடியும் என்பதுடன் முதற்கட்டமாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் 15 கோடி ரூபாய்கள் வரை திட்டங்களிற்கு ஏற்ப நிதியுதவி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து காரைநகர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிற்கான அடிப்படை அத்தியாவசிய அரச உதவிகளை பெற்று வழங்குவதில் சிரத்தையுடன் செயற்பட்டு வருவதாகவும், கடந்த மாதம் காரைநகர் பிரதேசத்திற்கான சுகாதரா பணிப்பாளர் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களை நியமித்திருந்தார். அத்துடன் அடுத்து வரும சில வாரங்களில் காரைநகரில் அமையப்பெற்றுள்ள கால்நடைகளிற்கான மருத்துவமனைக்கு நிரந்தரமான வைத்தியரை நியமிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும் இன்னும் சிலவாரங்களில் நிரந்தரமான கால்நடை வைத்தியர் நியமிக்கப்படுவார் எனவும் உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 30, 2021 அன்று காரைநகர் பிரதேச செயலகத்தில் இந்த ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதன் போது காரைநகர் மக்களின் மேலதிக தேவைகள் கேட்டு அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு கிராமசேவகர்கள் ஊடாகவும், காரைநகருக்கான தனது பிரதிநிதியாக உத்தியோகபூர்வமாக திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் காரைநகர் மக்கள் தங்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் நேரடியாக தன்னிடம் தெரிவித்துக்கொள்ள முடியும் எனவும் அதற்காக தனது குழுவில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள திரு.குருபரன் மூலமாக காரைநகர் மக்கள் தன்னை தொடர்பு கொள்ள முடியும் எனவும் கோத்தபாய அரசின் மூலம் அனைத்து அரச உதவிகளையும் காரை மண்ணும் பெற்றுக்கொள்ள தனது பணி அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஊடாக எடுத்த முயற்சிகள் காரைநகர் இந்துக்கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றும் திட்டம் பயனளிக்கவில்லை. என்றாலும் 2018ம் ஆண்டு காரைநகர் இந்துக் கல்லூரிக்கு தேசிய பாடசாலை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வசதியாக பாடசாலையை சுற்றிவரவுள்ள மூன்று காணிகள் பாடசாலைக்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்ததும் அதன் மூலம் போதிய இடவசதிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காரைநகர் இந்துக்கல்லூரியுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தேசிய பாடசாலை அங்கீகாரத்தை பெற்ற மற்றைய பாடசாலை விபரங்கள் வருமாறு: