கனடா காரை இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க ‘இன்னிசை வசந்தம்’ நிகழ்விற்கு ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com ஆதரவு வழங்குவதில் பேருவகை கொள்கின்றது!01.10.2022

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்கள் என்றும் எப்போதும் சீரிய பாதையில் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது.


2019ம் ஆண்டு முதல் 2021 காலப்பகுதியில் அதாவது கோவிட் பெருந்தொற்று காலத்திலும் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக காரை இந்துவிற்கான உதவிகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு பாடசாலை நிர்வாகம் தடையின்றி செயற்பட பலவழிகளிலும் உதவி புரிந்து வந்துள்ளது.


இக்காலப்பகுதியில் மொத்தம் 43 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் இந்துக் கல்லூரியின் தாய் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் அதில் 20 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளதும் பல்வேறு அத்தியாவசிய அவசியமான தேவைகள் பாடசாலையில் நிறைவேற்றப்பட்டுள்ளதும் இக்கட்டான சூழ்நிலையின் போதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாடசாலை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் மேற்படி நிதி உதவி மூலம் பாடசாலை நிர்வாகம் செயற்பட்டு வந்ததையும் அறியமுடிகின்றது. கனடாவில் இயங்கும் காரை இந்து பழைய மாணவர் சங்கமானது கனடாவில் காரை இந்து பழைய மாணவர்களிடம் சேர்த்துக்கொள்ளும் நிதியானது எந்த தேவைகளை முன்னிறுத்தி சேர்க்கப்பட்டதோ அதற்காகவே வழங்கி வருவதையும் அதனையும் அன்றே செய்வதையும் இங்கே கவனிக்கத்தக்கது.


இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமன்றி கடந்த பத்து ஆண்டுகளாக கனடா காரை இந்து பழைய மாணவர் சங்கமானது காரை இந்துவின் தேவைகளை அறிந்து செயற்பாடுகளை அறிந்து அதற்கான நிதி உதவிகளை பெற்று உடனடியாக அவற்றினை செயற்படுத்தி வருவதை அறிந்து கொள்ளும் எவரும் பழைய மாணவர் சங்கத்திற்கு அனுசரணை வழங்க பின்னிற்பதில்லை. பாடசாலையின் தேவைகளை முன்னிறுத்தி சேகரிக்கப்படும் நிதியும் மேலதிகமாக இசை நிகழ்வு மற்றும் இன்னோரென்ன அன்பளிப்புகள் மூலம் பெறப்படும் நிதியும் பாடசாலையின் தேவைகளிற்காகவே பயன்படுத்தி வருவதையும் கடந்த பத்து ஆண்டுகளாக காணக்கூடியதாக உள்ளது.


ஊரின் பெயரால் ஊர் மக்களின் பெயரால் இயங்கி வரும் பல ஊர் அமைப்புக்களில் இருந்தும் ஒரே ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அதற்காகவே இயங்கி வரும் கனடா காரை இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு அனுசரணை வழங்குவதன் மூலம் ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com பேருவகையும் பெருமையும் கொள்கின்றது.