காரைநகர் பிரதேச செயலர் பிரிவு ஆரம்பமும் அதன் வளர்ச்சியும்...லங்கை தீவில் ஆங்கிலேயருடைய சிவில் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கிய யாழ்ப்பாண மாவட்டமானது 1947ம் ஆண்டளவில் டி.ஆர்.ஓ. என்றழைக்கப்படும் காரியதிகாரி முறைகொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாவட்டமானது வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, யாழ்நகரம், தீவகம் என ஐந்து நிர்வாகப்பிரிவுகளாக மணியகாரன் கந்தோர் என்ற பெயருடன் இயங்கி வந்தன. பின்பு தீவக வலயமானது நெடுந்தீவு, தீவகம் என இரண்hக பிரிக்கப்பட்டது.


1969ம் ஆண்டு காரியதிகாரி காரியாலயம் என்ற பெயர் உதவி அரசாங்க அதிபர் பணிமனை என மாற்றடைந்தது. தீவகமானது தீவகம் வடக்கு, தீவகம் தெற்கு, நெடுந்தீவு எனப்பிரிந்து மூன்று பிரிவுகளாக இயங்கி வந்தது. காரைநகர் பிரதேசமானது நிர்வாக ரீதியில் தீவகம் வடக்கு(ஊர்காவற்றுறை) உதவிஅரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு உட்பட்டதாகக் காணப்பட்ட அதேவேளை தேர்தல் தொகுதி ரீதியில் வட்டுக்கோட்டை தொகுதியுடனும், நீதித்துறை சார்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றின் ஆழுகையின் கீழும், கல்விதுறையினை பொறுத்தவரை ஆரம்பத்தில் பண்டத்தரிப்பு கோட்டத்துடன் இணைந்திருந்து பின்பு தீவக வலயத்துடனும், மீன்பிடித்துறையைப் பொறுத்தவரையில் சுழிபுரம் கடற்தொழில் பரிசோதகர் அலுவலகத்தின் கீழும், விவசாயம் சார் செயற்பாடுகள் தொல்புரம் கமநல சேவை அலுவலர் பிரிவின் கீழும் இணைக்கப்பட்டு செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.


அத்துடன் உள்ழூராட்சி நிர்வாகமான பிரதேசசபை ஊர்காவற்றுறையுடன் இணைக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. 2003ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் காரைநகரை சேர்ந்த அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் இந்து கலாசார அமைச்சராக பணியாற்றியபோது அவருடைய வேண்டுகோளிற்கு அமைய உள்நாட்டு அலுவல்கள், மகாணசபை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டு காரைநகர் பிரதேசத்திற்கென தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவும், கமநல சேவைகள் நிலையமும் பிரதேச சபையும் தோற்றம் பெற்றது.

தோற்றம் பெற்ற காரைநகர் பிரதேசத்திற்கான தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான பணிமனை சின்னாலடியில் தனியார் ஒருவரது இல்லத்தில் தற்காலிகமாக 07.04.2003இல் உத்தியோகபூர்வமாக அப்போதைய இந்து கலாசார அமைச்சராக விளங்கிய தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்ள அப்போதைய அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு.செ.பத்மநாதன் அவர்களால் காரைநகரை சேர்ந்த திரு.வே.சாம்பசிவம் அவர்கள் முதலாவது உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அப்போது 9 நிரந்தர உத்தியோகத்தர்கள், 5 கிராம சேவையாளர்கள், 13 சமுர்த்தி அலுவலர்கள் அடங்கிய ஆளணியுடன் இயங்க ஆரம்பித்திருந்தது.

தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் இந்து கலாசார அமைச்சராக இருந்த அதே காலத்தில் இரண்டாவது உலக இந்து மாநாடு ஞாபகர்த்தமாக காரைநகர் வலந்தலை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்து மாநாட்டு மண்டபத்திற்கு 2004.05.02 அன்று உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் இடமாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வந்தது. 2006.04.03 அன்று வலந்தலை சந்தியில் இருந்து கிழக்கு றோட் பக்கமாக அமைந்துள்ள காணியில் நிரந்தரமான செயலளர் பணிமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு மாடிகளைக் கொண்ட பிரதேச செயலக கட்டிடப்பணிகள் ரம்பிக்கப்பட்டன. 39.5 மில்லியன் ரூபா மொத்த மதிப்பீடு செய்யப்பட்டு, குவைத் அரசாங்கத்தின் Scap திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 22.2 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டது.

உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டதை தொடர்ந்து காரைநகர் உதவி அரசாங்க அதிபர் அலுவலகமானது 2011ம் ஆண்டு காரைநகர் பிரதேச செயலகம் என தரமுயர்த்தப்பட்டது. 2013ம் ஆண்டு பிரதேச செயலக கட்டிட பணிகள் நிறைவு பெற்று திருமதி தேவநந்தினி பாபு அவர்கள் காரைநகர் பிரதேச செயலராக கடமையாற்றிய பொழுது 18.09.2013 அன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னா அவர்கள் காரைநகர் பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கட்டிடத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.


2003 முதல் இதுவரை காரைநகர் பிரதேச செயலர்களாக இருந்து பணி புரிந்தவர்கள் விபரம் வருமாறு:

1. திரு.வே.சாம்பசிவம் 2003.04.07 - 2004.05.02

2. செல்வி க.பிரபா 2004.05.02 - 2004.09.30

3. திரு.க.ஸ்ரீமோகனன்(பதில்) 2004.09.30 - 2006.05.30

4. திரு.இ.த.ஜெயசீலன் 2006.05.31 - 2012.01.04

5. திருமதி தேவநந்தினி பாபு 2012.01.05 - 2017

6. திரு.ஈ.தயாரூபான் 2017

7. திருமதி உஷா சுபலிங்கம் 2017 - 2020.02.26

8. திரு.மரியதாஸ் ஜேகூ 2020.02.27 - தற்போது