காரைநகர் அபிவிருத்தி சபையின் யாப்பு திருத்தப்பட்டது!06.11.2022எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்


காரைநகர் அபிவிருத்தி சபை ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளின் பின்னர் யாப்பு 06.11.2022 அன்று திருத்தப்பட்டு அன்றைய தினமே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இதுவரை காலமும் காரைநகர் அபிவிருத்தி சபையின் யாப்பு எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்று அறிந்து கொள்ள வேண்டிய தேவை இனி இல்லாத போதிலும் திருத்தப்பட்ட யாப்பு முறையானது எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகின்றது. காரணம் காலத்தின் கட்டாயம். காரணம் போட்டி பொறாமை அரசியல் மற்றும் வேறு பல தேவைகளை முன்னிறுத்தி காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகத்தில் பங்கேற்க முண்டியடிக்கும் பலருக்கும் காரைநகர் அபிவிருத்தி சபை என்பது காரைநகர் அபிவிருத்தியில் மட்டுமே என்பதை வரையறுத்துள்ளது.


*காரைநகரில் நிரந்தர வதிவுரிமையை கொண்டு ஆயுட்கால அங்கத்தவராக அல்லது தொடர்ச்சியாக மூன்றாண்டுகளிற்கும் மேலாக அங்கத்தவராக உள்ள ஒருவரே நிர்வாக சபையில் அங்கம் வகிக்க தகுதியுடையவராகின்றார்.

*தலைவராக பதவி வகிக்க காரைநகரில் வேறு ஒரு அமைப்பில் தலைவராக குறைந்தது ஒருவருடமாகவேனும் அல்லது காரைநகர் அபிவிருத்தி சபையில் குறைந்தது 5 ஆண்டுகள் நிர்வாக சபையில் பதவி வகித்திருக்க வேண்டும்.

*ஆயுட்கால அங்கத்தவர்களிற்கே அதிக உரிமையை கொடுத்துள்ளது புதிய யாப்பு.


ஆயுட்கால அங்கத்துவம் 10,000(பத்தாயிரம் ரூபா) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுட்கால அங்கத்தவராக பத்தாயிரம் ரூபா செலுத்தினால் ஆயுள் முழுவதும் அங்கத்தவராக இருக்கவும் முடியாது, அதற்கும் ஆயுட்கால அங்கத்தவர்கள் தமது ஆயுட்கால அங்கத்துவத்தை தாமாகவே இழந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பங்களும் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


யாப்பு திருத்தத்தின் பல முக்கிய திருத்தங்கள் நிர்வாக சபை பதவிகள் குறித்தே அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன். புதிதாக காரைநகரில் பிரதேச வாதம் உள்ளது என்பதை வெளிப்படையாக காரைநகர் அபிவிருத்தி சபை யாப்பின் திருத்தங்கள் ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். களபூமி, வலந்தலை, தங்கோடை பெரும் பிரிவுகளாக இனம் காணப்பட்டுள்ளது. களபூமி வலந்தலை தங்கோடை என்பவற்றிற்கு புதிதாக எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


பிரதேசவாதம் இருக்ககூடாது என்று சொல்ல வேண்டியவர்களே பிரதேசங்களை வரையறுத்துள்ளார்கள். வளர்ந்து வரும் டியிற்றல் உலகில் ஏழரைக்கும் நாலரைக்குள்ளும் பிரதேசங்களை வரையறுத்து பதவிகள் ஒதுக்கப்படும். இன்னும் பத்து வருடங்களில் சாதிகளின் பெயரினாலும் பதவிகள் ஒதுக்கப்படும். ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் நாங்கள் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்னும் நோக்கோடு வாழ்பவர்கள். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கொதிப்பது போல் கொதிப்பார்கள் ஆனால் அவர்களால் மீண்டும் இறக்குமதி செய்யப்படுவதே இந்த பிரிவினைகள்.


02.10.222 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது

1).திரு.ஆறுமுகம் திருக்கேதீஸ்வரன் தலைமையில்

2).திரு.சுப்பிரமணியம் குருபரன்,

3).திரு.பொன்னம்பலம் பரந்தாமன்,

4).திரு.வேலாயுதம் ஆனைமுகன்

ஆகியோர் பொதுச்சபையினரால் யாப்பு குழுவினராக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


இக்குழுவினரால் மீளமைகப்பட்ட யாப்பானது 26.10.2022 அன்று தற்போதைய நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிர்வாக சபையினரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்தன் பின்னர் 06.10.2022 அன்று காரைநகர் சைவமகா சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயுட்கால உறுப்பினர்களின் 2/3 என்ற சதவீதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


புதிய யாப்பு திருத்தத்தினை முழுமையாக புரிந்து கொள்வதற்கும் விளங்கி கொள்வதற்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள ‘எனது ஊர் காரைநகர்’ காலாண்டு சஞ்சிகையின் 27வது வெளியீட்டினை பெற்று வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.