காரைநகரின் புதிய வைத்திய அதிகாரியாக(MHO) Dr.யோ.யதுநந்தன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

காரைநகர் பிரதேசத்திற்கென தனியானதொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் காரைநகருக்கென தனியானதொரு சுகாதார வைத்திய அதிகாரியினை பணியமர்த்துவதில் இருந்த சிரமம் இந்த வாரத்துடன் தீர்ந்தது. ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய காரைநகரைச் சேர்ந்த Dr.பரா நந்தகுமார் அவர்கள் acting சுகாதார வைத்திய அதிகாரியாக கடந்த பல மாதங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர ஊர்காவற்றுறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து புதிய வைத்திய அதிகாரியாக Dr.யோ.யதுநந்தன் அவர்கள் 08.12.2020 அன்று காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த சில வாரங்களாக காரைநகரில் ஏற்பட்ட கொரோனா பரவல் தொடர்பான சர்ச்சைகளின் போது சுகாதார ஆலோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த அனைத்து வகையிலும் தகமைவாய்ந்த சுகாதார வைத்திய அதிகாரி இன்மையினால் சுகாதார பரிசோதகர்(PHI) பலவித சிரமங்களிற்கு உள்ளாகியிருந்தார். ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தின் செய்தியாளர் ஒருவர் மூலமாக சுகாதார பரிசோதகருடன் விபரங்களை கேட்டறிந்து ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாகவும் முயற்சிகளை மேற்கொண்டோம். வடமாகாண சுகாதார அமைச்சிற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு காரைநகருக்கான சுகாதார வைத்திய அதிகாரியினை நியமிக்க வேண்டுகோள் விடுக்குமாறு கூறியிருந்தார்.

அதனடிப்படையில் அந்த வேண்டுகோளினை விடுக்க காரைநகர் பிரதேச செயலகம் மற்றும் காரைநகர் பிரதேச சபை மக்கள் பணியாளர்கள் பின்னின்ற வேளையில் ‘எனது ஊர் காரைநகர்’ முன்வந்து யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் ராமநாதன் ஊடாக வடமாகாண சுகாதார அமைச்சிற்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டது.

காரைநகரில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை மற்றும் பராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளினையும் கவனத்தில் கொண்டு ஒரு வாரத்தினுள் இந்த நியமனம் நடைபெற்றிருந்தது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றது இந்த இணையத்தளம். காரைநகர் மக்களின் சூழ்நிலையினை அறிந்து உடனடியாக செயற்பட்ட திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களிற்கும், அறிவுரை வழங்கிய காரைநகர் சுகாதார பரிசோதக உத்தியோகத்தர் திரு.a.பிரதீப் அவர்களிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது ‘எனது ஊர் காரைநகர்’.

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் காரைநகரில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியின் போது காரைநகர் சுகாதார உத்தியோகத்தர் இரவு பகலாக சேவையாற்றி காரைநகர் மக்களின் நன்மதிப்பையும் நல்லாசிகளையும் பெற்றுள்ள இந்த வேளையில் அரச உத்தியோகத்தராயினும் மக்கள் தேவையறிந்து கடமை புரிந்த திரு.A.பிரதீப் காரை மண்ணின் மக்களின் சுகாதார பணியில் சிறப்புற பணியாற்ற வாழ்த்துக்கள் கூறுவதுடன் காரை மண்ணிற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்ற பொறுப்பேற்றுள்ள Dr.யோ.யதுநந்தன் அவர்களை காரை மண் வருக வருக என வரவேற்கின்றது.

காரை மண்ணின் பெருமை உலகறியும். காரை மண்ணிற்கு சேவை புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எங்கள் ஊர் உறையும் தில்லைக்கூத்தனும் ஆண்டிகேணி ஐயனும் காரை மக்களும் எச்சந்தர்ப்பத்திலும் கைவிடப்படமாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இந்த வருடம் ஒக்டோபரில் வேம்படி-பத்தர்கேணி வீதியில் கொடைவள்ளல் சுவிஸ் நாதன் அவர்களினால் வழங்கப்பட்ட ஐந்தரை பரப்பு காணியில் முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி dr.பரா நந்தகுமார் அவர்களின் பெரும் முயற்சியினால் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.Dr.யோ.யதுநந்தன்