ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்திற்கான தேவைகளும் உதவிகளும்..!
(படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன!)
காரைநகர் மத்தி சிவகாமி அம்மன் கோயிலின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள ஒளிச்சுடர் விளையாட்டு கழக மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
நாட்டின் மற்றும் ஊரின் தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களை வழிநடாத்த வேண்டிய பாரிய தேவை காரைநகர் அனைத்து சேவையாளர்கள் மற்றும் ஊர் மன்றங்களிற்கு அத்தியாவசியமாகின்றது. இன்றைய இளைஞர்களே நாளைய தலைமுறையை வழிநடாத்தி செல்லும் வல்லுனர்களாக உருவாகின்றார்கள். இந்த நிலையில் அதிகூடிய வகையில் இளைஞர்களை உள்ளடக்கியதாக உள்ள ஒளிச்சுடர் விளையாட்டு கழக செயற்பாடுகளை நேரடியாக சென்று அவதானிக்க முடிந்தது. இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு மைதானம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இளைஞர்களிற்கு பொழுது போக்கிற்கான நேரம் அதிகரித்துள்ளதும் அந்த நேரத்தை மனதை ஒருநிலைப்படுத்தி உடற்பயிற்சியிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபட வைப்பது சமூக சேவையாளர்களின் கடமையும் கட்டாயமும் ஆகின்றது. ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்திற்கு தற்போது குறிப்பிடத்தக்களவு மைதானம் அமைந்துள்ளதும் அதற்கு மேலும் வசதிகளை வழங்கி மேம்படுத்தி அழகுற அமைத்துக் கொடுப்பதன் மூலம் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்தின் செயற்பாடுகளில் ஆர்வமும் அதனை முன்னின்று செயற்படுத்தும் செயற்பாட்டாளர்கள் ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக அதற்கான உதவிகளை கோரியுள்ளனர்.
காரைநகர் பிரதேச செயலகத்தின் ஊடாக மலசல கூட வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ரூபா ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனாலும் அதன் மூலமாக மலசல கூட திட்டத்தினை நிறைவு செய்ய போதுமானதாக இருக்கவில்லை. மேற்கொண்டு கோரப்பட்ட 70,000 ரூபாய்கள் ‘எனது ஊர் காரைநகர்” தனிப்பட்டளவில் வழங்கியுள்ளது.
அத்துடன் நேரடியாக சென்று பார்வையிட்ட போது வசதி குறைந்த விளையாட்டு வீரர்களின் நலன் கருதி 12 உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்களிற்கான காலணிகள் பெற்றுக்கொள்வதற்காக 50,000 ரூபாவும் வழங்கப்பட்டது.
மேற்கொண்டு மைதானத்தின் எல்லைப்பகுதியில் நுழைவாயில் கேற் அமைப்பதற்கு ரூபா இரண்டு இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்களிற்கான உத்தேச செலவு விபரங்களை பெற்று அனுப்பியுள்ளனர்.
அது மட்டுமன்றி மழைகாலங்களிலும் வெள்ளம் நிற்காத வண்ணம் மைதானத்தில் விளையாடக்கூடிய வகையில் மைதானத்தை சீர் செய்ய மேற்கொண்டு 20 இலட்சம் ரூபாய்கள் செலவில் மேம்படுத்தவும் உத்தேச செலவு விபரங்களும் பெற்று அனுப்பியுள்ளனர். ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக ஒளிச்சுடர் விளையாட்டுக்கழகம் கோரியிருக்கும் மைதான எல்லைப்பகுதி நுழைவாயில் இரட்டை கேற் மற்றும் சுழல் கேற் அமைப்பதற்குரிய செலவினை வழங்க முன்வந்துள்ளோம்.
நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை கொண்டு விளங்கும் ஒளிச்சுடர் விளையாட்டு கழகம் மேற்படி கோரப்பட்ட இரண்டு இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்களில் 50 ஆயிரம் ரூபாய்களை தமது விளையாட்டு வீரர்களிடம் இருந்து தலா 500 ரூபா வீதம் பெற்றுக்கொண்டு விளையாட்டு வீரர்கள் இத்திட்டத்திற்கான தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு மேற்கொண்டு செலவாகும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் அன்பர்களிடம் இருந்து பெற்று வழங்க முன்வந்துள்ளது.
இத்திட்டத்திற்காக இன்று 18.05.2022 கனடிய டொலர் ஒன்றின் பெறுமதி 270 ரூபாய்களாக உள்ள நிலையில் 1000 டொலர்கள் வரை பெற்று அனுப்ப தீர்மானித்துள்ளது. தயவு செய்து காரைநகர் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற நிதியினை நேரடியாகவோ அன்றி இந்த இணையத்தளத்தினை தொடர்பு கொள்வதன் மூலம் நேரடியாக ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்திற்க வழங்க முடியும்.
நேரடியாக ஒளிச்சுடர் விளையாட்டு கழகம் ஊடாக தங்களது பெயரில் ரசீதி உடனடியாக பெற்று வழங்கப்படும். ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக இந்த திட்டம் அறியத்தரப்பட்டாலும் நீங்கள் வழங்கும் நிதியுதவி நேரடியாக தங்கள் பெயரிலேயே விளையாட்டு கழகத்திடம் சமர்ப்பிக்கப்படும். கேற் அமைப்பதற்காக வேலைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் சூழ்நிலைகளினால் பொருட்கள் மற்றும் கூலியின் தொகை அதிகரித்து வருவதாலும் 25.05.2022 அடுத்த வாரம் உத்தேசிக்கப்பட்ட தொகை அனுப்பப்படவுள்ளது.
‘எனது ஊர் காரைநகர்” ஊடாகவும் நேரடியாகவும் இத்திட்டத்திற்கு பணம் வழங்குபவர்கள் பெயர் விபரம் அடுத்த வாரம் முழுமையாக பணம் வழங்கப்பட்டதும் இவ்விணையத்தளத்தில் அறியத்தரப்படும். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்!