காரை வசந்தம் - 2005 இல் 10.12.2005 அன்று கனடாவில் காரை வசந்தம் மேடையில் வாசிக்கப்பட்டது.
ஆக்கம்: தீசன் திரவியநாதன்காரை மண்என் இனிய ஊரே...

காரை மண்ணே கவிபாடி நான் களிக்க தமிழ் தந்த என் தாயே...

உனக்கு முதல் வணக்கம்!


ஊரே திரண்டு இன்று விழா அமைக்க

அதில் நான் உனக்காக கவி சமைக்க

கேட்க வரும் சபையே – உங்களுக்கு

குளிரிலும் வசந்தகால வணக்கம்!


காரை என்றொரு ஊர்

கரை இல்லா கல்வியும்

நுரை கொண்ட கடலும்

வளம் கொண்ட மண்ணும் - வற்றாது

வழங்கும் கொடை கொண்ட மனமும்

யாழ் பெற்ற முத்தே காரைநகர்


வடக்கே சிவனும்

தெற்கே யமனும்

எங்கழூரில் ஆட்சி

ஈழமணித் திருநாட்டில்

எங்களுக்குண்டு தன்னாட்சி

அதுக்கில்லை மறுபேச்சு!


விளைகின்ற நெல்லுண்டு

விற்பதற்கு மீனுண்டு

கனிதரு மரமுண்டு

கள் தரும் மரமும் உண்டு

எல்லையிலே பிசகாமல் பெண் கடல் தானுமுண்டு


அயலூரும் நாங்களும்

அடுத்தடுத்த நாடுகள்

சொல்வதனால் நான் ஒன்றும்

தமிழினத்தின் வடுவல்ல – கேளுங்கள்...


கோட்டையுண்டு குளமும் உண்டு

ராசா கட்டிவைத்த கோயில் உண்டு

களமாடிய தளம் உண்டு

பலிகொண்ட படை தங்க நல்ல மடமுண்டு சொல்ல இன்னும் பலவுண்டு...


பன்னாடு சென்றும் பயன் இல்லை

என்னோடு மனதோடு செயலோடு காரை மணம் இல்லை எனில்...

கண்ணோடு மணிபோல காப்பதற்கு விண்ணோடு நாம் விடும் தூது


நிலம் உழுவதற்கும்

நீர் விடுவதற்கும்

கடல் போவதற்கும்

கரை வருவதற்கும்

கல்வி தரவும்

செல்வம் பெறவும்

அனுமதி தேவையில்லை

எங்கழூரில் எமக்கது தேவையில்லை


மண்ணின் மனிதர்கள் நாங்கள் உழைக்கின்றோம் கொடுக்கின்றோம் செய்வதும் செயல்படுத்துவதும் நீங்களன்றோ...


கொடுக்கின்ற கைகள் கூடி

எடுக்கின்றோம் விழா இங்கே

விதிவசம் பிரித்தது எங்களை – ஆனால் மானம் காத்தது மண்ணின் வாசம்

ஊரும் உறவும் அங்கிருக்க

வாயும் வயிறும் வழி சமைக்குமா இங்கே


வேர்கள் நீங்கள்

விழுதுகள் நாங்கள்

தாங்கும் நாங்கள் தமிழர்கள்

ஓடுகின்ற இரத்தம் குளிரிலும் உறையாமல் ஓடுகின்றதே – காரணம்

நாங்கள் காரை தீவு...


வீசுகின்ற காற்றும்

விடுகின்ற மூச்சும்

பேசுகின்ற தமிழும்

பெற்ற நல் தாயும்

காசுதரினும் கடைசிவரை கைவிடோம்!


கூட்டலும் கழித்தலும்

கழுவலும் தழுவலும்

தலையாய கடமை என்றால் - அதனை வகுத்தலால் பெருக்குவோம்

எம் ஜென்மம் விடிவு பெற...


(காரை வசந்தம் - 2005 இல் 10.12.2005 அன்று கனடாவில் காரை வசந்தம் மேடையில் வாசிக்கப்பட்டது. ஆக்கம்: தீசன் திரவியநாதன்)

கீழே உள்ள படத்திற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்காதீர்கள்... விடையும் விடிவும் நாங்களும் எதிர்பார்க்கிறோம்...!