காரைநகர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்வார்கள்.நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையை பிறப்பிடமாகவும் உடையார்கட்டு வடக்கு உடையார்கட்டை வதிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சரஸ்வதி தம்பதிகளின் மகனான சிவகுமார் அவர்கள் பற்றி அவருடைய மறைவின் பின்னர் உடையார்கட்டு முல்லைத்தீவு மக்கள் பெருமையுடன் காரை மண்ணின் மைந்தன் பற்றி தெரிந்து கொண்டு பெருமை கொள்கின்றார்கள்.


40 ஏக்கர் சிவா என எல்லோராலும் அழைக்கப்படும் நமசிவாயம் சிவகுமார் அவர்கள் முல்லைத்தீவில் பெரும் கொடையாளியாக வாழ்ந்து வந்துள்ளார். 1960ம் ஆண்டு பிறந்த இவர் முல்லைத்தீவில் தனது உழைப்பினால் முன்னேறி பலவகையான தான தர்ம பணிகளிலும் ஈடுபட்டுள்ள போதிலும் எவ்வித பெருமைகளும் இன்றி வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது வாழ்ந்து வந்துள்ளார்.


தேவிபுரத்தில் இனியவாழ்வு இல்லம் அமைப்பதற்காக தனது சொந்த காணியான மூன்று கோடி பெறுமதியான பத்து ஏக்கர் காணி நிலத்தினை நன்கொடையாக வழங்கியவர். அத்துடன் உடையார்கட்டு ஆரம்ப பாடசாலை அமைப்பதற்கும், திரிஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் தேவையான தனது சொந்த காணியினை நன்கொடையாக வழங்கியவர்.


1960.07.15இல் பிறந்த இவர் 2021.08.09 அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரது பிரிவின் பின்னர் முல்லைத்தீவு உடையார்கட்டு மக்கள் அன்னாரின் பெருமைகளையும் அன்னாரது இழப்பின் வலிகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.