ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன்கோயில் மூன்றாம் வீதி சுற்றுப்பிரகாரம் வேலி அமைக்கும் பணியில் திடீர் தடங்கல்!
காரைநகர் சிவன் கோயில் மூன்றாம் வீதியின் சுற்றுப்பிரகாரத்தை சுற்றிவர வேலி அமைக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்துள்ளது. அத்துடன் மூன்றாம் வீதிக்கு உட்பட்ட ஆலய வீதியில் நிழல் மரங்கள் மற்றும் தென்னம் கன்றுகள் நடுவதற்கான பணிகளும் சேர்ந்து செயற்படுத்தப்பட்டு வந்தன.
ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவரான திரு.முருகேசு சுந்தரலிங்கம் அவர்களது ஏற்பாட்டில் 12 இலட்சம் ரூபா செலவில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆலய மூன்றாம் வீதியினை சுற்றிவர 385 சீமெந்து தூண்கள் கொண்டு அமைக்கப்பட்டு வரப்பட்டது. மூன்றாம் வீதியின் தெற்கு பகுதியில் தினகரன் பிட்டி வைரவர் ஆலயத்திற்கு அண்மையில் ஒரு வாசல் அமைக்கப்பட்டு அதற்கு இரும்பு கேற் மற்றும் தனி நபர்கள் சென்று வருவதற்கான சுற்று கேற் அமைக்கப்பட்டு வந்துள்ளன.
நேற்றைய தினம் 12.10.2020 திங்கட் கிழமை மாலை 9 மணியளவில் இந்த தெற்கு பகுதி கேற் மற்றும் சுற்று கேற் என்பன இனந்தெரியாத சிலரால் தள்ளி விழுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
ஈழத்து சிதம்பரத்தின் மூன்றாம் வீதிக்கு இவ்வாறு சுற்று வேலி அமைக்கும் பணி தொடர்பாக காரைநகர் பிரதேச சபையினரிடம் உரிய அனுமதி பெறப்படவில்லையென ஆதினகர்த்தாக்களில் ஒருவரான திரு.ஆண்டிஐயா அம்பலவிமுருகன் அவர்களது சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, காரைநகர் பிரதேச சபையினரால் சுற்றிவர வேலி அமைக்கும் பணியில் வேலி அமைப்பதற்காக எந்தவித அனுமதியும் பெறதேவையில்லையெனவும் ஆனால் கொன்கிறீட் கொண்டு வேலி அமைப்பதாக இருந்தால் அதற்குரிய அனுமதி பெறப்படவேண்டும் எனவும் அவ்வாறு தொடர்ந்து கொன்கிறீட் கொண்டு வேலி அமைப்பதாக இருந்தால் அனுமதியினை பெற்று தொடர்ந்து வேலி அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும் திரு.முருகேசு சுந்தரலிங்கம் அவர்களிற்கு காரைநகர் பிரதேச சபை திங்கட்கிழமை அறிவித்திருந்ததாகவும் அறியப்படுகின்றது.
இந்த நிலையில் அதே தினம் நேற்று மாலையில் தெற்கு வீதி தினகரன்பிட்டி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் போடப்பட்டிருந்த கேற்றுக்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.
கீழே மூன்றாம் வீதியை சுற்றிவர அமைக்கப்பட்டு வந்த வேலி மற்றும் சேதமாக்கப்பட்ட பகுதி புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.