ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பிணக்குகள் தொடர்பாக நல்லதொரு முடிவினை காரைநகர் ஈழத்து சிதம்பர அடியவர்கள் எடுத்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம்!ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன்கோயில் மணிவாசகர் மடாலய அன்னதான சபை வருடாந்த பொதுக்கூட்டமும், கணக்கறிக்கை சமர்ப்பித்தலும் 2020.10.11 ஞாயிற்றுக்கிழமை மடாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


வருடந்தோறும் திருவெம்பாவை தினத்திற்கு முந்தைய மாதங்களில் இந்த பொதுக்கூட்டம் கூட்டப்படுவது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக காலம் தவறாது கூட்டப்படும் இப்பொதுக்கூட்டத்தின் போது அதற்கு முந்தைய வருட கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிர்வாகத்திற்கு புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்வதும் மடாலய அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களும் கலந்துரையாடப்பட்டு வந்துள்ளது.


இந்த வருடம் மடாலய நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சச்சரவுகள் காரணமாக பலவித பிணக்குகள் கோயில் நிர்வாகம் சார்பாகவும், மடாலயம் சார்பாகவும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. அதன் காரணமாக ஈழத்து சிதம்பரம் அடியவர்கள் மனதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், ஈழத்து சிதம்பரத்தில் தொண்டாற்றும் சேவையாளர்கள் மத்தியில் இரண்டு பகுதிகளாக கருத்து மோதல்கள் இடம்பெற்று வருவதும் கடந்த சில மாதங்களாக யாவரும் அறிந்ததே.


அதனைத் தொடர்ந்து சமூக இணையத்தளங்களில் தனிப்பட்ட அவதூறுகள் மிகவும் மோசமான வார்த்தை பிரயோகங்கள் கையாளப்பட்டு மடாலயம் சார்ந்து அல்லது சிவன்கோயில் சார்ந்து செயற்படுகின்றோம் என கருதும் சேவையாளர்களினால் எழுதப்பட்டு வரப்படுகின்றது. தற்போது மடாலயம் சார்ந்தும் சிவன்கோயில் சார்ந்தும் பலவித சர்ச்கைகளிற்குரிய பிணக்குகள் நீதிமன்றில் இருக்கின்ற போதிலும் நீதி மன்றத்தினால் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ அன்றி கோயில் மற்றும் மடாலயத்தின் நல்லெண்ணம் கருதி விட்டுக்கொடுக்கும் தன்மையோ ஏற்பட்டுவிடப்போவதில்லை.


ஆனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு தரப்பினரும் சுமூகமான தீர்வு காணும் பட்சத்தில் வழக்குகளிற்கு செலவாகும் பல இலட்சம் ரூபாய்கள் செலவு மிச்சப்படுத்தப்படுவதோடு கோயில் நல்லெண்ணம் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் காக்கப்படும். கடந்த பல வருடங்களாக மணிவாசகர் மடாலய அன்னதான சபை நிர்வாகத்தினரால் தொடர்ச்சியாக வருடந்தோறும் கூட்டப்படும் பொதுக்கூட்டத்தின் போது தற்போதைய அதிருப்தியாளர்களினாலே அல்லது கோயில் நிர்வாகத்தின் ஒரு சாரரினாலோ கணக்கறிக்கை சம்பந்தமாக எவ்விதமான குறைபாடுகளும் முன்வைக்கப்படாத நிலையில் இவ்வருடம் ஜனவரியில் மடாலய திறப்பு மடாலய நிர்வாகத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.


தொடர்ந்து நிர்வாகத்தினரால் தொடரப்பட்ட வழக்கினால் மீண்டும் 10.07.2020 அன்று திறப்பு நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டு அன்னதான பணி தொடர்வதற்கு நீதிமன்றத்தினால் தற்காலிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வழமைபோல் திருவெம்பாவை உற்சவ காலத்திற்கு முன்னர் எதிர்வரும் 11.10.2020 அன்று மணிவாசகர் மடாலய நிர்வாகம் சார்பாக பொதுக்கூட்டம் கூட்டுவதற்கான அறிவித்தல் யாழ் நகரில் வெளியாகும் நாளிதள் மூலமாக அடியவர்களிற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.


பொதுக்கூட்டத்தின் போது கலந்து கொண்டு சுமூகமான வழியில் கருத்துப்பரிமாற்றம் மூலம் நல்லதொரு முடிவு எட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இரண்டு தரப்பிலும் பொதுக்கூட்டத்தின் போது மடாலயம் தவிர்ந்து தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகள், கோபம், பொறாமைகள் காரணமாக தேவையற்ற வாய்த்தர்க்கங்கள் இடம்பெறவும் அதிக வாய்ப்புக்கள் உண்டு. இந்த நிலையில் கோயில் நிர்வாகமோ அல்லது மடாலய நிர்வாகமோ பொதுக்கூட்டத்தின் போது மோசமான வார்த்தை பிரயோகம், தனிப்பட்ட வகையில் அவமதிப்பு மற்றும் மடாலயம் தவிர்ந்து வேறு கருத்துப்பரிமாற்றங்களை தவிர்த்து நல்லதொரு பொதுக்கூட்டத்தை நடாத்த முன்வரவேண்டும்.


இரண்டு தரப்பினரும் பொதுக்கூட்டத்தின் போது கல்வியாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மடாலயம் சார்ந்து பணிகளில் ஈடுபட்டு அனுபவம் உள்ள பெரியவர்களின் கருத்துக்களிற்கு மதிப்பளித்து, வயதிற்கும், அனுபவத்திற்கும் மதிப்பளித்து பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்படும் முடிவுகளிற்கு கட்டுப்பட்டு செயற்படும் நிலையில் பொதுக்கூட்டத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.


மடாலயம் மற்றும் கோயில் நல்லெண்ணம் கருதாத தனிப்பட்ட கோபதாபங்கள், வியாபாரம், அரசியல், குடும்ப ரீதியான பிரச்சனைகளை ஈழத்து சிதம்பரம் வரவேற்பு கோபுரம் தாண்டி தினகரன் பிட்டி வைரவர் முன்றலில் தேங்காய் அடித்து கற்பூரம் கொழுத்தி வழிபட்டு செல்லும் போது எல்லாவற்றையும் அந்த இடத்தில் கைவிட்டு கோயில் உள்ளே நுழைவார்களேயானால் நீதிமன்றமும், வக்கீலும் இன்றி சிவன்கோயில் மணிவாசகர் மடாலய அன்னதான சபை சிறப்புற செயற்படவும், அடியவர்கள் திருவெம்பாவை காலத்தின் போது அன்னதான பணியில் ஈடுபட்டு அடியவர்களிற்கு அமுதளிக்கும் பணியில் ஈடுபட முடியும்.