வைத்தீஸ்வரக் குருக்களின் ஆளுமைச் சுவடு22.09.2021 இன்று அமரர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களின் 105வது ஜெயந்தி தினம்

அந்தணர்குண் மணியனையானருங்கலைகள்

மிகப்பயின்றானருமையாசான்

சந்ததமுஞ் சிவனன்புதழைக்கின்ற

வுள்ளத்தான் றகைசால் நண்பன்

கந்தமலிபூம்பொழில் சூழ் திண்ணபுரங்

கவினோங்குங்கருத்துமிக்கான்

வந்தவருக் கமுதளிப்பான்

வண் பெயர்கொள்

வைத்தீஸ்வரக் குருக்கள்

- ஈழத்துச்சிதம்பரபுராணம் -


சைவப்பணி, தமிழ்பணி, நூல்வெளியீட்டு பணி என பன்முக ஆறுமைகளில் தன்னை ஈடுபடுத்தி, அர்ப்பணித்த பெருந்தகை மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் ஆவார். யாழ்ப்பாணத்துக் காரைநகரின் புகழ் பூத்த சைவத்திருத்தலமான ஈழத்து சிதம்பரத்தின் அந்தணப் பரம்பரையில் தோன்றிய சிவத்திரு கணபதீஸ்வரக் குருக்கள் சிவயோக சுந்தராம்பாள் தம்பதிகளின் இளைய மகனாக 1916.09.22 ஆம் திகதி அவதரித்தார்.


இவர் தனது ஆரம்ப கல்வியை காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலையிலும்(சடையாளி பள்ளிக்கூடம்), இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலும் கற்று சமஸ்கிருதத்தில் பிவேச பண்டித பரீட்சையிலும் தமிழில் பாலபண்டித பரீட்சையிலும் சித்திபெற்றார்.


குருக்களின் சுவடுகள் சைவப்பணியில் மிகவும் ஆழமாக பதித்த சுவடாக மிளிர்ந்தது காரைநகர் மணிவாசகர் சபையின் தோற்றம் ஆகும். சபையினை ஆரம்பிக்கமுன்னர் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளின் ஆசிபெறச் சென்ற போது அவர் ‘வேண்டத்தக்கதறிவோய் நீ’ என்ற திருவாசகத்தை பாடி ஆசி வழங்கியதன் பெயராக 1940.01.01 ஆம் திகதி மணிவாசகர் சபை ஆரம்பமானது. இச்சபை மூலம் குருக்கள் சைவ உலகுக்கு ஆற்றிய பணிகள் கணக்கிலடங்கா.


காரைநகரில் 1960 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழகத்தை அமைத்து அதன் மூலம் பல தமிழ் பணிகள் செய்தார். க.பொ.த(சா/த) மாணவர்களுக்கு பகுதி ஒன்றிற்கான தமிழ் மாதிரி வினாத்தாள் வெளியிட்டு மாணவரின் கல்விப் பணிக்கு உதவினார்.

இக்கழகத்தின் செயற்பாடு 1970-1980 தசாப்தங்களில் மிகவும் சுடர் விட்டு பிரகாசித்தது. காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் 26 நூல்கள் வெளியிட்டார். இவற்றுள் கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதரால் எழுதப்பட்ட திருமுறைப் பெருமை, கார்த்திகேயப் புலவரால் இயற்றப்பட்ட திண்ணபுர அந்தாதி என்பவை குறிப்பிடத்தக்கவையாகும்.


மணிவாசகர் சபையினூடான குருக்களின் சைவப்பணியும், தமிழ் வளர்ச்சிக் கழகமூடான தமிழ்ப்பணியும் சைவத்தமிழ் பாரம்பரியத்தில் அவரின் ஆளுமை தடத்தைப் படிப்படியாக பதிக்க வைத்தது. இவ்வாறே அவர்களின் நூல் வெளியீட்டுப் பணிகள் இதனை மேலும் வலுவூட்டியது. தமிழ் வளர்ச்சிக்கழகம் ஊடாக பல்வேறு வகையான நூல்களை வெளியிட்டபோதும் இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்துச் சிதம்பர புராணத்தின் வெளியீடு கோடிட்டுக் காட்டப்படவேண்டியதொன்றாகும். ஈழத்துச் சிதம்பரத்தின் மூலமூர்த்தியான ஆண்டிகேணி ஐயனாருக்கு புராணம் இயற்ற வேண்டும் என்ற சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குருக்கள், வட்டுக்கோட்டைப் பண்டிதர் மயில்வாகனம் மூலம் ஆண்டிகேணி ஐயனார் புராணத்தை இயற்றுவித்து சைவப் புலவர் செல்லத்துரையினால் உரை செய்வித்து மணிவாசக சபை ஊடாக 2007 ஆம் ஆண்டு வெளியிட வைத்தவர்.


ஈழத்துச் சிதம்பர புராணத்துக்கு " சிறந்த முடிவுகளை உடையநூல்” என்று 1974ம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி இலங்கை தேசியநூல் அபிவிருத்தி சபையால் பராட்டப்பட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. குருக்களுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 13.10.2002 இல் “தத்துவகலாநிதி” பட்டத்தினையும் வழங்கி கௌரவித்தது. 1995 இல் இலங்கை கம்பன் கழகம் “மூதறிஞர்” என்ற பட்டத்தினயும், 18.11.2001 இல் “கலைஞானகேசரி” என்ற பட்டத்தை வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள் அமைச்சு வழங்கி கௌரவித்தனர். 04.11.2207 இல் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் “சிவாகம கிரியா பூஷணம்” என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.


இவ்வாறாக பலவிருதுகள், பராட்டுக்கள் பட்டங்கள் என்பவை குருக்களின் சேவையை கௌரவப்படுத்தி, முதன்மைப்படுத்தியமை சைவத்தமிழ் பாரம்பரியத்தில் அவரின் ஆளுமைச் சுவடுகளுக்கு குறிகாட்டிகளாக அமைந்துள்ளன. குருக்கள் தன்னிடம் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களில் பலவற்றை மகாராணி சோமசேகரம் அவர்களினடம் கையளித்தார். அவர் காரைநகர் காரைநகர் வியாவில் ஐயனார் கோவிலில் புதிய கட்டடம் அமைத்து குருக்கள் ஐயாவின் தந்தையார் பெயரிலான “கணபதீஸ்வரக்குருக்கள் நூல் நிலையம்” என அமைக்கப்பெற்று நடைபெற்று வருகின்றது.


சைவத்துக்கும் தமிழுக்கும் பல்வேறு வகையான சேவைகளை அர்ப்பண உணர்வுடன் செயற்பட்டு தனது ஆளுமைச் சுவடுகளை சைவத் தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக பதித்த குருக்கள் ஐயா அவர்கள் 24.04.2015 அன்று ஈழத்துச் சிதம்ப கூத்தப்பிரான் திருவடி நிழலை அடைந்தார்.


நாவலர் வழியில் சைவத் தமிழ் பாரம்பரியத்தில் சுவடுகள் பதித்த குருக்கள் ஐயாவின் புகழ் ஓங்குக.

- காரைநகர் மணிவாசகர் சபையினர்

22.09.2021