காரைநகர் மண் செய்த தவப்பயனாக மண்ணிற்காக பணி புரிய ஒப்பற்ற சேவையாளர்கள் அவதரித்து வந்துள்ளார்கள். அந்த வகையில் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் காரை மக்கள் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சேவையாளராக, காரை மண்ணிற்கு ‘கல்வி அழகே அழகு’ என்பதற்கிணங்க கல்வி வளர்ச்சிக்கா அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றார்.
திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் தற்போது பிரித்தானியா நாட்டில் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராக விளங்கி வருபவர். காரைநகர் வலந்தலை வடக்கு(சடையாளி), மெய்கண்டான் பாடசாலை மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். இடம் பெயர்ந்து பிரித்தானியா நாட்டில் வாழ்ந்து வந்தாலும் காரைநகர் மண்ணில் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் கல்விக்காக ஆற்றிவரும் பணிகளை பட்டியல் இட்டு சொல்ல முடியாதளவிற்கு வருடந்தோறும் மாதந்தோறும் கிழமைதோறும் நாட்கள் தோறும் ஏதாவது ஒரு பணி காரைநகரில் நடைபெற்று வருகின்றது.










தனது பணிகளை நெறிப்படுத்தவும், காரைநகர் மக்களை நேரடியாக சென்றடையவும் “சக்தி இலவசக் கல்வி மேம்பாட்டு நிலையம்” என்னும் நிறுவனத்தை நிறுவினார். அதனூடாக காரைநகர் மாணவர்களிற்கான இலவச கல்வியை வழங்கி வருவதோடு, கலை வளர்ச்சிக்கான கலை வகுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றார்.










சக்தி இலவசக் கல்வி மேம்பாட்டு நிலையத்தினூடாக மட்டுமன்றி ஸ்ரீ சிதம்பரேஸ்வரா சனசமூக நிலையம், சிவகௌரி சனசமூக நிலையம் மற்றும் இலந்தச்சாலை சனசமூக நிலையம் ஆகியவற்றினூடாகவும் கல்விக்கான பணிகளோடு வாழ்வாதார உதவிகள் மற்றும் அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.




திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் அமைதியான வகையில் ஆரவாரமின்றி ஆற்றிவரும் பணிகளை அறிந்து கொள்ள இந்த இணையத்தளம் எடுத்த முயற்சியின் பயனாக 2019இல் கனடாவில் அவரை சந்திக்க முடிந்தது. எந்த விளம்பரங்களையோ அன்றி தனது சேவைகளையோ ஊர் அறிய உலகறிய எடுத்து சொல்வதில் கூச்ச சுபாவத்துடன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்களால் காரைநகர் மண்ணில் மக்களிற்காக மாணவர்களிற்காக ஆற்றிய ஆற்றி வருகின்ற சேவைகளை நாம் சொல்ல மறந்தால் மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகலாம்.
அந்த வகையில் தனிப்பட்ட ஒரு தனிநபராக காரைநகரில் பல்வேறு நிர்வாகங்களின் ஊடாக ஆற்றிவரும் பல கோடி ரூபாய்கள் பெறுமதியிலான பணிகளை நாம் அறிந்து கொள்வதன் மூலம் காரை மண் ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்’ என்று மகிழ்வோடு அரவணைத்துக்கொள்ளும்.
மெய்கண்டான் பாடசாலையின் வளர்சியில் பெரும் தூணாகவும், சிதம்பரேஸ்வரா சனசமூக நிலையத்தினை கட்டுவித்தமை, இலந்தச்சாலை சனசமூக நிலையம், சாம்பலோடையில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய அந்தியட்டி மடம், சடையாளி பள்ளிக்கூடத்திற்கான 200 அடி நீளமான மதில், மற்றும் பல அலங்கார வளைவுகள், பாடசாலைகளிற்கான நவீன வசதிகள் கொண்ட அதிபர் அலுவலகங்கள் என பல கட்டிட பணிகளோடு பாடசாலை மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வுகள், ஊக்குவிப்பு நிகழ்வுகள், கற்றல் உபகரணங்கள் வழங்குதல் என்பவற்றோடு மனிதாபிமான பணிகள் என கடந்த சில மாதங்களில்(Jan 2021) எண்ணற்ற பணிகளை ஆற்றியுள்ளார்.
திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் ஆற்றிய பணிகள் ஒவ்வொன்றையும் இங்கே தனித்தனியாக பட்டியல் இட்டு கூறமுடியாத வகையில் பல நூற்றுக்கணக்கான பணிகளை கடந்த சில மாதங்களில் மட்டும் நிறைவேற்றியுள்ளார். இந்த வாரம் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம், வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலயம் என்பவற்றிற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போட்டோ பிரதி இயந்திரங்களை சக்தி இலவசக்கல்வி நிலையத்தினூடாக வழங்கியுள்ளார்.
அத்துடன் சுப்பிரமணியம் வித்தியாசாலை, ஊரி அ.மி.த.க.பாடசாலை என்பவற்றிற்கு நவீன வசதிகளுடன் கூடிய அதிபர் அலுவலகம் அமைத்து வரப்படுகின்றது.
‘வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ’ என்று இறைவனை நோக்கிய தேவாரப்பாடல் ஏனோ இந்த இடத்தில் ஞாபகத்திற்கு வருகின்றது. பாடசாலைகளின் தேவையறிந்து கேட்பதற்கு முதலே நிறைவேற்றி வழங்கி வருகின்றார் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள். ‘எனது ஊர் காரைநகர்’ இந்த இணையத்தளம் காரை மண்ணின் தேவையறிந்து பலவித செய்திகளை முன்னெடுத்து வந்துள்ளது. உரியவர்களிற்கு அதனை தெரியப்படுத்தியும், மண்ணிற்காக மக்களிற்காக பயனை பெற்றுக்கொடுக்க விமர்சனங்களையும் எடுத்து வருகின்றது. அந்த வகையில் இன்றைய நிலையில் ஊர் மன்றங்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாத பல பணிகளை தனியொருவராக இனம் கண்டு நிறைவேற்றி வருகின்ற திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் காரை மண் பெற்றெடுத்த தவப்புதல்வன் என்பதில் மிகையேதும் இல்லை.
சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலையத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டு வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான கற்பித்தல் மற்றும் அனைத்து வகுப்புக்களிற்குமான இலவச ரியூசன் வகுப்புக்கள் என்பனவற்றுடன் விளையாட்டு கழகங்களிற்கான அனுசரணை மற்றும் விளையாட்டு கழகங்களிற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கியமை அத்துடன் கடந்த வாரம் (Feb 2021)கலாநிதி விளையாட்டுக்கழகம், சிவகௌரி விளையாட்டு கழகங்களின் கரப்பந்தாட்ட மைதானத்திற்கு இரவு நேர விளையாட்டுக்காக உயர்வலுக்கொண்ட மின்னிணைப்பு மற்றும் மின்விளக்குகள் பல இலட்சம் ரூபாய்கள் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் சடையாளி பள்ளிக்கூடத்தின் 200 அடி நீளம் கொண்ட மேற்குப்புறத்திற்கு சுவர் அமைத்து மாணவர்களிற்கு இதமான கற்றல் சூழ்நிலையினை உருவாக்க கற்றலுடன் கூடிய வர்ண சித்திரங்கள் வரைந்து கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி கடந்த வருடம் சடையாளி பள்ளிக்கூடத்திற்கான அலங்கால வளைவும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
கற்றவர்கள் எல்லோரும் கல்வியாளர்களும் அல்ல, பணம் படைத்தவர்கள் எல்லோரும் பணக்காரரும் அல்ல. எவனொருவன் தான் கற்ற கல்வியினால் சமுதாயத்திற்கான பணியை செய்கின்றானோ, எவன் ஒருவன் தான் பெற்ற பணத்தின் ஊடாக தான் சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்ற பாடுபடுகின்றானோ அவனே அறிவாளி, அவனே உலகில் மிகப்பெரிய பணக்காரன். அந்த வகையில் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்கள் காரை மண்ணில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பாடுபடுகின்ற பெரும் அறிவாளி. காரை மண்ணின் மதிப்பிற்குரிய சேவையாளர்.
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்களது சேவைகளும் பணிகளும் முழுமையாக எடுத்து வரமுடியாது விட்டாலும் தன்னலமற்ற வகையில் ஊரிற்காக ஆற்றும் பணிகள் ஊடாக காரை மண்ணில் மக்களும் மாணவர்களும் பயனடைந்து கொள்கின்றார்கள். திரு.இந்திரன் அவர்கள் விரும்புவது போன்று தனது பணிகளை அவராலும் பட்டியல் இட்டு கூறமுடியாது. எம்மால் முடிந்தளவு அல்லது இந்த இணையத்தளத்தின் வாசகர்களால் வாசித்து அறிந்து கொள்ளகூடியதை மட்டும் இங்கே எடுத்து வந்திருக்கின்றேன்.
மேலதிகமாக ஒவ்வொரு செயற்பாடுகளையும் இன்னும் கொஞ்சம் அதிகம் அறிந்து கொள்ள ‘சக்தி இலவசக் கல்வி நிலையம்’ என்கின்ற முகநூலில் இணைந்து கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆனாலும் அங்கும் திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அல்லது முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து பணிகளும் முழுமையாக எடுத்துவரப்படுவதில்லை. காரணம் சொல்வதை விட செய்வதே அதிகமாக உள்ள காரணத்தினால் சொல்வதற்கான நேரம் போதாமையே காரணமாகலாம்.