வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் காரைநகர் கோட்டமும் தீவக வலயமும் கடைசி இடத்தில்…!

வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் காரைநகர் கோட்டமும் தீவக வலயமும் கடைசி இடத்தில்…!

இலங்கை வடமாகாணத்தின் கல்வி செயற்பாடுகள் 13 வலயங்களாகவும் 35 கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு கல்வி நிர்வாக செயற்பாடுகள் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகர் பாடசாலைகள் தீவக வலய பிரிவில் உள்ளது. அது தவிர காரை மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரனின் தீர்க்கதரிசனத்தால் காரைநகர் தனியான பிரதேச அலகாக பிரகடனப்படுத்தப்பட்ட காரணத்தால் தனியானதொரு கல்விக்கோட்டத்தையும் பெற்றுக்கொண்டது.

கடந்த வாரம் Aug 21, 22, 23 ஆகிய நாட்களில் நடாத்தப்பட்ட வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தீவக வலயம் கடைசி இடத்தை பெற்றுக்கொண்டது.

தீவக வலயத்தில் தனியான கோட்ட பிரிவை கொண்டும் விளங்கும் காரைநகர் பாடசாலைகளில் விளையாட்டுத்துறை மிகவும் மோசமான இடத்தில் உள்ளதும் உயர்தர பாடசாலைகளான காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாலயம் என்பவற்றில் இருந்து 40 மாணவர் வலய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டார்கள் என்பதுடன் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் பாடசாலையில் இருந்து எவரும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வலய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மன்னார் வலயம் 501 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்திலும் 74 புள்ளிகளை மட்டும் பெற்று தீவக வலயம் கடைசி இடமான 13 வது இடத்திலும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்

தீவக வலயம் பெற்றுக்கொண்ட புள்ளிகளில் காரைநகர் இந்துக்கல்லூரியில் இருந்து கலந்து கொண்ட மாணவி உயரம் பாய்தலில் 6 வது இடத்தை பெற்றுக்கொண்டு 1 புள்ளிகளையும், வியாவில் சைவ வித்தியாலயம் முதலாவது இடம் ஒன்றினையும் 5ம் இடம் ஒன்றினையைம் பெற்றுக்கொண்டு 12 புள்ளிகளையும், யாழ்ற்ரன் கல்லூரி 3ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 6ம் இடம் என தலா ஒவ்வொரு இடங்களை பெற்றுக்கொண்டு 20 புள்ளிகளையும் தீவக வலயம் சார்பாக பெற்றுக்கொண்ட 74 புள்ளிகளில் காரைநகர் கோட்டம் 23 புள்ளிகளை வழங்கியுள்ளது.

காரைநகர் பாடசாலைகளில் விளையாட்டுத்துறை மிகவும் பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை கல்வியாளர்கள் மிகவும் துல்லிதமாக கண்டறிந்துள்ளார்கள். அதற்கான பின்வரும் காரணங்கள் முக்கிய இடத்தினை பெற்றுள்ளதை உன்னிப்பாக அவதானியுங்கள்.

1. பாடசாலை அதிபர்கள் விளையாட்டுத்துறையை கண்டு கொள்வதே இல்லை.(வியாவில் சைவ வித்தியாலயம் தவிர).

2. காரைநகர் மக்கள் விளையாட்டுத்துறையில் பங்குபற்றும் மாணவர்களிற்கு ஊக்கம் வழங்குவதில்லை. காரணம் 90களிற்கு முன்னர் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைத்த காரைநகரில் தற்போது விளையாட்டுத்துறையில் ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவர்கள் ஊரி, மருதபுரம், வேரப்பிட்டி ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வதிபவர்களாலும் குறிப்பாக பாடசாலை அதிபர்களினாலும் விளையாட்டுத்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது.(ஆமா.. இது சாதி பிரச்சனை தான்..)

3. பாடசாலைகளில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க எந்த அமைப்புக்களோ சபைகளோ எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

காரைநகரில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய SKT சதாசிவம் அவர்கள் அமரர் கலாதிதி ஆ. தியாகராஜா அவர்களால் இனங்காணப்பட்டு பயிற்றுவிப்பாளராக பணியமர்த்தப்பட்டு பின்னர் ஆசிரியராக, அதிபராக, காரை மண்ணின் சேவையாளராக, பொதுப்பணிகளின் தொண்டனாக மண்ணிற்கான மகத்தான பணிகள் பலவற்றில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாகவே. அதே போன்று காலைநகரில் 80களிலும், 90களிலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் பெருமை பெற்றவர்களும் பதவி பெற்றவர்களும் பலர் உள்ளனர்.

பாடசாலை முடிவில் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களிற்கு குடிநீர் வழங்க முடியாத நிலையில் பாடசாலை முடிவில் குடிநீரை குழாய்களை மூடிவிட்டு சென்ற அதிபர் உள்ள பாடசாலையும் காரைநகரில் உள்ளது.

விளையாட்டு பயிற்சி ஆசிரியரிடம் ‘ இதுகள் விளையாடி என்னத்தை கிழிக்க போகிறதுகள், இதுகளிற்கு படிப்பும் வராது, பாடசாலைக்கு ஏன் வருதுகள்..’ என்று சொல்லும் அதிபர்களும் காரைநகரில் தான் இன்றும் உள்ளார்கள்.

(இதுகள்… என்பதின் அர்த்தம்..?).

காரைநகர் உயர்தர பாடசாலைகளான காரை இந்து, யாழ்ற்ரன், வியாவில் சைவ வித்தியாலயம், களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை என்பவற்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் அண்ணளவாக 300 மாணவர்களில் வருடத்திற்கு எத்தனை மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிறார்கள்..?

ஏன் விளையாட்டு துறையை வெறுப்போடு பார்க்கிறார்கள்..?

காரைநகர் பாடசாலைகளும் விளையாட்டு துறையும்.. மேலும் விபரமாக விமர்சனங்களும் அதற்கான விமோசனமும்… எதிர்பாருங்கள். நன்றி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்!. காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது

இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்