கனடாவில் உயர் படிப்பிற்கான கல்விக்கடன் பெரும் சுமையே!

வெற்றி பெற்ற பலரும் சொல்லாமல் விட்ட கதை. கண்ணூறு என்பதை நம்பி கடவுளையும் கனடிய கல்விக்கான உதவிகளையும் பெறமுடியாமல் தோற்றுப்போனவர்கள் பிழையாக சொன்ன கதை.

எனது மூன்று பிள்ளைகளிற்காக கடந்த 20 வருடங்களாக மாதந்தோறும் $150 டொலர்கள் கனடிய அரசு வழங்கிய பிள்ளைகளிற்கான மாதாந்த உதவிப்பணத்தில் இருந்து RESP எனப்படும் கனடிய அரசின் கல்விக்கான உதவித்திட்டத்தில் கலந்து கொண்டு கட்டிய பணத்தின் கடைசி தொகையை பெற்றுக்கொண்ட நாள் 11.10.2024 இன்றாகும்.

கடந்த 20 வருடங்களில் என்னால் இத்திட்டத்திற்காக கட்டப்பட்ட தொகை $35,000 ஆனால் இதுவரை இன்றைய கடைசி withdrawal உடன் பிள்ளைகளின் படிப்பிற்காக இத்திட்டத்தினூடாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட தொகை $70,000 டொலர்கள் ஆகும்.

மாதந்தோறும் நாம் பிள்ளைகளின் படிப்பிற்காக அரசின் RESP திட்டத்தில் பணம் சேகரிக்கும் போது கனடிய அரசும் மாதாந்தம் அதற்கான ஒரு தொகை பணத்தை எமது திட்டத்தில் வைப்பு செய்கிறது. அத்துடன் இரண்டிற்குமான வட்டி என்பனவும் சேர்ந்து நாம் கட்டிய பணம் சிறு தொகையாக இருந்தாலும் அதனூடாக பெரும் பயனை அடைய கூடியதாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் எனது மூன்று பிள்ளைகளிற்கும் கடனின்றிய கல்வியை கொடுக்க முடிந்ததுடன் கனடாவில் மற்றுமொரு கல்விக்கான அரச கடன் திட்டமான OSAP மூலமாக கடன் பெற்று படிக்கவில்லை என்பதும் நான்கு வருட பல்கலைக்கழக படிப்பின் பின்னர் குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் கல்விக்கடனுடன் தமது பட்டங்களை பெறப்போவதில்லை.

RESP- கல்விக்காக முற்கூட்டி பணத்தை சேமித்தல்(கனடிய அரசின் திட்டம்).

OSAP – கல்விக்கான கனடிய அரசின் கடன்.

RESP திட்டத்தின் மூலம் இணைந்து கொண்ட பலர் இடையிலேயே தோற்று வெளியேறியதுடன் கட்டிய பணத்தையும் இழந்தவர்கள் பலர். அதற்கான காரணம் அவர்கள் இந்த அரசின் திட்டத்தை வியாபாரமாக்கி தமது கமிசனுக்காக மாதாந்தம் ஒருவரால் கட்டமுடியாத தொகையை கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்டதும் இடையிலே இரண்டொரு மாதம் கட்டாமல் விட்டதும் அத்திட்டம் கைவிடப்பட்டதும் பின்னர் கட்டிய பணம் penalty யாக கழிக்கப்பட்டதும் RESP திட்டத்தின் ஊடாக தமிழ் பிள்ளைகள் பலரும் பயனடையாமல் போனதற்கான காரணம்.

கனடிய வங்கி ஒன்றில் RESP கணக்கை எமது பிள்ளைகளின் பெயரில் திறந்து அதனூடாக மாதாந்தம் எம்மால் ஆன தொகையை செலுத்தி வருவதன் ஊடாக எமது வங்கியானது நாம் மாதாந்தம் கட்டும் பணத்திற்கு ஏற்றவகையில் மட்டும் அதன் பங்குகளை பெற்றுக்கொள்வதுடன் அரசின் ஊடாக மாதாந்தம் இத்திட்டத்திற்காக வழங்கப்படும் பணத்தினையும் தாமாக பெற்றுக்கொண்டு எந்தவித இடையூறுகள் ஏற்பட்டாலும் எவ்வித penalty யும் இன்றி வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

இத்திட்டத்தில் முகவர் ஊடாக இணைந்து கொண்டவர்கள் கட்டிய பணத்தை இழந்ததுடன் இத்திட்டம் பயன்ற்ற ஒரு திட்டமாக புதிய இளம் பெற்றோருக்கு தெரிவித்தும் வருகின்றனர்.

முகவர் ஊடாக இணைந்து கொண்டால், முகவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகை Share பங்குகளை உங்களது பெயரில் பெற்றுக்கொண்டு அதற்காக மாதாந்தம் அதிகளவு பணத்தை செலுத்த உங்களது பேராசையை தூண்டிவிடுகிறார்கள்.

அவ்வாறு மாதாந்தம் $300 டொலர்கள் அல்லது அதற்கும் மேற்பட்டளவில் பணம் செலுத்தவும் அதிகூடிய Share களை உங்களையும் அறியாமல் முகவர்கள் தங்களது கமிசனுக்காக உங்களிடம் திணித்தவர்கள் இரண்டொரு வருடங்களில் அந்த மாதாந்த தொகையை செலுத்த முடியாதளவில் கைவிட்டார்கள். அது மட்டுமன்றி முகவர் ஊடாக அதிகளவு பங்குகளை வேண்டுவதற்கு ஒப்பந்தமாகி இடையில் கைவிட்டவர்கள் மிகுதி வேண்டாத பங்குகளிற்கான penalty ஐ செலுத்த ஏற்கனவே இரண்டொரு வருடங்கள் கட்டிய பணத்தையும் இழந்து அவர்களது பிள்ளைகளின் கடனின்றிய கல்வியை தொலைத்தவர்கள்.

ஆனால் நாம் ஒரு கனடிய அரச வங்கி ஒன்றில் எமது பிள்ளைகளிற்கான RESP கணக்கை திறந்து முடிந்த போது அதிக தொகையும், முடியாத போது மாதாந்த தொகையை கட்டாது விட்டாலும் கூட நாம் எந்தளவு பணம் கட்டினோமோ அதற்கேற்ற பங்குகளை மட்டுமே மாதாந்தம் பெற்றிருக்கும். எவ்வித penalty உம் அறவிடவோ அன்றி பெற்ற பங்குகள் தொடர்ந்தும் பணம் செலுத்தாது போனாலும் இழக்க வேண்டியதும் இல்லை.

2000 ம் ஆண்டுகளில் கனடாவில் RESP முகவர்களாக அனைத்திலும் தங்கள் விளம்பரங்களை முன்னிறுத்தி தமது கமிசனுக்காக மட்டும் வேலை செய்தவர்கள் எத்தனை முகவர்கள் இன்னமும் அதே பணியில் உள்ளார்கள் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அதே 2000 ஆண்டு காலத்தில் பிறந்து இன்று 20 வயதுகளில் தமது பல்கலைக்கழ உயர்படிப்பை முடித்து வெளிவரும் பல ஆயிரக்கணக்கான தமிழ் பிள்ளைகள் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் டொலர்கள் கல்விக்கடனுடன் தான் வெளி வருகிறார்கள். இதில் சில பிள்ளைகளும் பெற்றோர்களும் ஒரு வகையில் சந்தோசமும் பெற்றுக்கொள்கிறார்கள், காரணம் நாம் பெற்ற கடன் ஒன்றரை இலட்சம் அதில் கனடிய அரசு ஐம்பதாயிரம் தள்ளுபடி செய்துள்ளது எனவே அது தமக்கு ஐம்பதாயிரம் இலாபம் என்றும் சந்தோசமாக கடனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தமிழ் சமூகம் மிகப்பெரும் கல்வி பின்புலம் கொண்டது. ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று வளர்க்கப்பட்ட சமூகம். அதனால் கடன் பெற்றாலும் பிள்ளைகளை படிக்க வைத்தோம் என்பதில் பெருமை கொள்கிறது.

ஆனாலும் 2000 ஆண்டுகளில் கனடாவில் இளம் பெற்றோர்களிற்கு இருந்த தேவைகள் பூர்த்தியாகி பிள்ளைகளிற்காக அரசு வளங்கிய மாதாந்த அரச உதவிகளில் தமது தேவைகளை பூர்த்தி செய்து புதிசாக கார் ஓடியவர்கள், படித்து முடிந்த பிள்ளைகளை கடனில் விட்டுள்ளார்கள். ஒரு வேளை அந்த படித்து முடிந்த பிள்ளைக்கு பேச்சு திருமணம் ஊடாக திருமணம் நிச்சயமானால் அந்த கல்விக்கடனை கட்டப்போவது யார்..?

பேச்சு திருமணத்தில் கல்விக்கடன் ஒரு இலட்சம் டொலர்களுடன் உள்ள ஒருவரை எவர் செய்ய முன்வருவார்கள..? கல்விக்கடன் இன்றி படித்து முடித்த ஒருவரும் கல்விக்கடன் உள்ள ஒருவரும் திருமணத்தில் பேச்சு திருமணம் ஊடாக இணைந்து கொண்டால் அவர்கள் இருவரும் தானே பொறுப்பு ஆகிறார்கள்.

காதல் திருமணமாக இருந்தாலும் கடனின்றி படித்த எனது பிள்ளைக்கு வரனாக வருகின்ற ஒருவர் கல்விக்கடனுடன் வருகின்ற போது அந்த கடனிற்கு எனது பிள்ளையும் சேர்ந்து பொறுப்பாக வேண்டியுள்ளது. இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை தமிழ் மக்களிடத்தில் சீதனம் என்கிற நிலமை அருகி வந்தாலும் கல்விக்கடன் என்கிற நிலமை புதிதாக முளைத்துள்ள பெரும் சுமையாகும். இதற்கு பெற்றோர்களே பெரும் பொறுப்பாவார்கள்.

படிப்பித்தோம், கல்யாணமும் கட்டிவைத்தோம் என்று சொல்ல போகிற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கடனை கட்டிமுடிக்கவும் கடனின்றி அவர்கள் வாழ்க்கையை தொடங்கவும் பொறுப்பானவர்கள்.

ஏனெனில் படித்து முடிந்தவர்களின் திருமண பொருத்தங்களின் போது இது போன்ற விடயங்களும் உரையாடப்படுவதை அண்மைக்காலமாக நானும் அறிந்து கொள்கிறேன். நாளைக்கு எனக்கும் இதே சந்தர்ப்பம் எனது கதவையும் தட்ட போகிறது என்பது என்னையும் சிந்திக்க வைக்கிறது.

கீழே படத்தில காரைநகரில் எனது வீட்டில கடந்த வருட வீடுகுடி புகுர்வின் போது நட்ட பூமரம் பூத்துக்குலுங்கும் காட்சி. கண்ணூறு என்பது கடவுளை நம்பாதவன் பேச்சு. அறியாமையின் வெளிப்பாடு. நல்லதை சொல்வோம், நல்லதை செய்வோம். நாடும் நாமும் நலம் பெற நீங்கள் வாழ்த்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது.

ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.