காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.
காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே பதிவிடுவதை தவிர்க்கவும். நன்றி.)
ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா?
காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தல், இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
11 ஆசனங்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் எந்தவொரு கட்சியும் தனித்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், ஐந்து கட்சிகள் தலா இரண்டு ஆசனங்களையும், ஒரு கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், மூன்று தரப்புகள் இணைந்து தலா இரண்டு ஆசனங்கள் வீதம் மொத்தம் ஆறு ஆசனங்களுடன் ஆட்சியை அமைத்தன.
வட்டில் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு(1350 வாக்குகள்), மான் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் கூட்டணி(909 வாக்குகள்), சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்(833 வாக்குகள்) ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து இந்த ஆட்சியை அமைத்தன.
இந்த மூன்று தரப்புகளும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டன. அதன்படி, ஒவ்வொரு தரப்பும் தலா 16 மாதங்கள் வீதம் மொத்தம் 48 மாதங்களுக்கு ஆட்சியைப் பகிர்ந்துகொள்வதாக இணக்கம் காணப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, முதலாவது 16 மாதங்கள் சுயேச்சைக் குழுவுக்கும், அடுத்த 16 மாதங்கள் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், அதற்கடுத்த 16 மாதங்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கும் தவிசாளர் பதவியை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது, சுயேச்சைக் குழுவின் சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த மதிப்பிற்குரிய திரு. கிருஷ்ணன் கோவிந்தராஜன் அவர்களின் 16 மாத காலப் பதவிக்காலம் இம்மாதத்துடன்(October) நிறைவடைகின்றது. எனவே, 23.10.2026 நடைபெறவுள்ள பிரதேச சபை அமர்வின்போது அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த 16 மாதங்களுக்கான தவிசாளர் பதவியைத் தமிழ் மக்கள் கூட்டணி(மான்) ஏற்க வேண்டும்.
அதற்கடுத்த 16 மாதங்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் க்கு(சைக்கிள்) வழங்கப்பட வேண்டும்.
காரைநகர் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. இந்த நிலையில், அடுத்த தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பின்போது ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
அரசியல் போட்டிகளும் கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளும் இந்தத் தெரிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலை காணப்படுகிறது.
காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சுயேச்சைக் குழுவுக்கு முதலாவது 16 மாத காலத்திற்கான தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது தீசன் திரவியநாதன் ஆகிய என்னாலும் உரியவர்களிடம் உரிய நேரத்தில் என்னால் முன்வைக்கப்பட்டிருந்தது.
மூன்று தரப்புகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியில், சட்டத்தரணிகள் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதும் இந்தக் கருத்தை நான் முன்வைத்திருந்தேன். அத்துடன், தமிழ் மக்கள் கூட்டணியின்(மான்) தலைமைப் பீடத்திடமும் இதனைத் தெரிவித்திருந்தேன்.
காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சுயேச்சைக் குழுவுக்கு முதலாவது தவணைக்கான தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஒப்பந்தத்தை மதிப்பதே அரசியல் நாகரிகம்!
காரைநகர் பிரதேச சபையில் எதிர்காலத்தில் நேர்மையான, நாகரிகமான அரசியலை முன்னெடுக்க வேண்டுமானால், ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும்.
சுயேச்சைக் குழுவுக்கு முதலாவது தவணைக்கான தவிசாளர் பதவி வழங்கப்பட்டதைப் போலவே, அடுத்த இரண்டு தரப்புகளுக்கும் ஒப்பந்தத்தில் இணங்கியவாறு தலா 16 மாதங்கள் ஆட்சி செய்வதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய தவிசாளர் திரு. கிருஷ்ணன் கோவிந்தராஜன் அவர்கள் பதவியை இராஜினாமா செய்த பின்னர் நடைபெறவுள்ள தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், சுயேற்சை அணி(வண்டில்), தமிழ் மக்கள் கூட்டணி(மான்) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்(சைக்கிள்) தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அந்தச் சந்தர்ப்பத்தில், ஏனைய அரசியல் தரப்புகளின் ஆதரவு கிடைக்குமா என்பது ஒரு விடயம். ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்று தரப்புகளும் தங்களுக்குள் செய்துகொண்ட இணக்கப்பாட்டை மதித்து நடப்பது அதைவிட முக்கியமான விடயமாகும்.
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது, நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது போன்ற அரசியல் நடவடிக்கைகள் மூலம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் செயலிழக்கச் செய்ய முயற்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால், எதிர்காலத்தில் சுயேச்சைக் குழுக்களும் சிறிய கட்சிகளும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சி அமைப்பதற்குத் தயக்கம் காட்டக்கூடிய நிலை உருவாகும் என்பது உறுதி மட்டுமல்ல சுயேற்சைகளிற்கான அங்கீகாரம் எதிர்காலத்தில் புறக்கணிக்கப்படும் என்பதும் உறுதியாகும்
காரைநகர் பிரதேச சபையில் எதிர்காலத்திலும் எந்தவொரு கட்சியும் தனித்து அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவது சவாலானதாக இருக்கலாம் என்பது எனது கருத்தாகும்.
அவ்வாறான சூழ்நிலையில், கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.
எனவே, இப்போது ஏற்படுத்தப்படும் அரசியல் இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் எதிர்கால அரசியலிலும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைய வேண்டும்.
காரைநகர் மக்களின் நலனே முதன்மையானது!
காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராகப் பதவியேற்கும் ஒருவர், அரசியல் பதவியை வகிப்பதற்காக மட்டுமே அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடாது.
காரைநகர் மக்களின் அடிப்படைத் தேவைகள், வீதிகளின் அபிவிருத்தி, புனரமைப்பு, சுகாதாரம், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்.
பிரதேச சபைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை மட்டும் வைத்துக்கொண்டு காரைநகர் மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்வது சாத்தியமற்றதாக இருக்கலாம்.
எனவே, காரைநகர் மக்களின் தேவைகள் என்ன, குறைபாடுகள் என்ன, பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளின் நிலைமை என்ன, மேலும் என்னென்ன அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பவற்றைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அவற்றின் ஊடாக ஆளும் அரசிடம் மேலதிக நிதியை பெறும் வல்லமையும் திறமையும் ஆளுமையும் பெற்றிருக்க வேண்டும். காரைநகர் மக்களின் தேவைகளை உரிய முறையில் அரசாங்கத்திடம் எடுத்துரைத்து, மேலதிக நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான திறமையும் அனுபவமும் கொண்டவராகவும் தவிசாளர் இருக்க வேண்டும்.
மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக்கூடிய தலைமைத்துவம் அவசியமாகும்.
தமது பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், தங்களைத் தெரிவுசெய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட வேண்டும்.
தமது சொந்தப் பிரதேசத்தின் வீதிகள், அடிப்படை வசதிகள், அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தவிசாளரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக, அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டிகளைத் தாண்டி, காரைநகர் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயற்படக்கூடிய தவிசாளர் தேவை.
அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கான சேவை நேரடியாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாகவே மக்களை சென்றடைகின்றன.
காரைநகர் பிரதேச சபையில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் சபையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த அரசியல் நிலைப்பாடுகளும் கருத்துகளும் இருக்கலாம். அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் மூன்று அணிகள் போட்டுக்கொண்ட உடன்படிக்கை எதிர்கால அரசியலிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும்.
ஆனால், பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் காரைநகர் மக்களுக்குச் சேவை செய்வதற்கான பொறுப்பைக் கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
தனிப்பட்ட கோபதாபங்கள், கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அல்லது அரசியல் போட்டிகள் காரணமாக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது.
அடுத்த தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பிலும், அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் நிதியறிக்கையைப் பரிசீலிப்பதிலும், தேவையான திருத்தங்களை முன்வைப்பதிலும், சபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த தவணைகளில் தவிசாளர் பதவியை ஏற்கவுள்ள தரப்புகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்குவதும் அவசியமாகும்.
இவ்வாறு ஒத்துழைப்புடன் செயற்பட்டால் மட்டுமே காரைநகர் பிரதேச சபையின் நிர்வாகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதுடன், மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற முடியும்.
எதிர்கால அரசியலையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம்!
இன்று அரசியல் முடிவுகளை எடுப்பவர்கள் சிலர் எதிர்காலத்தில் அரசியலில் இல்லாமல் போகலாம்.
ஆனால், அவர்கள் இன்று எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் காரைநகர் பிரதேச சபையின் அரசியல் சூழ்நிலையிலும் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எந்தவொரு கட்சியும் தனித்து பெரும்பான்மையைப் பெற முடியாத சூழ்நிலையில், எதிர்காலத்தில் மீண்டும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், இன்று வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் நினைவுகூரப்படும்.
எனவே, காரைநகர் பிரதேச சபையில் அரசியல் நாகரிகத்தைப் பேணுவதும், ஒப்பந்தங்களை மதிப்பதும், ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் செயற்படுவதும் மிகவும் முக்கியமானதாகும்.
காரைநகர் மக்களின் நலனை முன்னிறுத்தி, சுயேச்சைக் குழு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்புகளும் தங்களுக்குள் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதித்து நடப்பார்கள் என நம்புகிறோம்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைநகர் பிரதேச சபை அமர்வின்போது, இந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அமர்வில் எடுக்கப்படும் முடிவுகள், காரைநகர் மக்களின் எதிர்கால அரசியல் சூழ்நிலைக்கும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் முக்கியமானதாக அமையக்கூடும்.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதித்து, அரசியல் நாகரிகத்துடன் செயற்பட்டு, காரைநகர் மக்களின் நலனுக்காக ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
காரைநகரின் எதிர்காலம் அரசியல் போட்டிகளில் இல்லை; மக்களுக்கான சேவையிலும், அரசியல் நாகரிகத்திலும், பரஸ்பர நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது.
‘செய் அல்லது செத்து மடி’
“எனது ஊர் காரைநகர்”
தீசன் திரவியநாதன். 19.10.2026

Leave a Reply
You must be logged in to post a comment.